Published : 13 Apr 2024 11:57 AM
Last Updated : 13 Apr 2024 11:57 AM

கரூர் | ஆட்சியர் அலுவலகத்தில் தபால் வாக்குகளை செலுத்திய தேர்தல் அலுவலர்கள்

போலீஸார் தபால் வாக்குகளை செலுத்தினார்கள்

கரூர்: ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த உதவி மையத்தில் காவல் கண்காணிப்பாளர், போலீஸார், ஊர்க்காவல் படையினர் இன்று (ஏப். 13ம் தேதி) காலை முதல் தங்களது தபால் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

கரூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார், ஊர்க்காவல் படையினர், தங்களது தபால் வாக்குகளை செலுத்த ஏதுவாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஏப். 13ம் தேதி) உதவி மையம் (பேசிலிட்டேஷன் சென்டர்) அமைக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த உதவி மையத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன் முன்னிலையில், முதல் ஆளாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.பிரபாகர் இன்று காலை 8 மணிக்கு தனது தபால் வாக்கினை செலுத்தினார்.

அவரை தொடர்ந்து ஏடிஎஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் தபால் வாக்குகளை செலுத்தினர். போலீஸார், ஊர்க்காவல் படையினர் நீண்ட வரிசையில் காத்திருந்து தபால் வாக்குகளை செலுத்தினர். மாலை 6 மணி வரை வாக்குகளை செலுத்தலாம். இம்மையத்தில் வாக்களிக்க மாவட்டம் முழுவதும் உள்ள 1,020 போலீஸார் மற்றும் 233 ஊர்க்காவல் படையினர் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள், வருவாய்த்துறையினருக்கு 4 சட்டப் பேரவைத் தொகுதகிளிலும் தபால் வாக்கு செலுத்தும் மையம் அமைக்கப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு தபால் வாக்குகள் செலுத்தும் பணி தொடங்கியது.

கரூர் தொகுதிக்கு தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரி மையத்தில் 110 பேர், கிருஷ்ணராயபுரம் தொகுதிக்கு புலியூர் ராணி மெய்யம்மை பள்ளி மையத்தில் 495, அரவக்குறிச்சி தொகுதிக்கு பள்ளபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மையத்தில் 520, குளித்தலை தொகுதிக்கு குளித்தலை கலைமகள் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மையத்தில் 450 பேர் தபால் வாக்குகள் செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாலை 5 மணி வரை தபால் வாக்குகளை செலுத்தலாம்.

மாவட்டத்தில் போலீஸார், ஊர்க்காவல் படையினர், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், வருவாய்த்துறையினர் என 2,808 பேர் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முன்னதாக ஏப். 4, 5, 6ம் தேதிகள் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மாற்றுத் திறனாளிகள் 3,233 தபால் வாக்குகள் செலுத்த விருப்பம் தெரிவித்திருந்தனர். அவர்களில் வாக்குகள் செலுத்தாதவர்களுக்கு நேற்று மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. 3,100க்கும் அதிகமானவர்கள் வாக்களித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x