Published : 08 Apr 2024 07:28 AM
Last Updated : 08 Apr 2024 07:28 AM

காங்கிரஸ் வாக்குறுதிகளை எந்த சூழ்நிலையிலும் நடைமுறைப்படுத்த முடியாது: கே.பி.முனுசாமி விமர்சனம்

கிருஷ்ணகிரி அருகேயுள்ள கிட்டம்பட்டியில் அதிமுக வேட்பாளர் ஜெயப்பிரகாஷை ஆதரித்துப் பேசிய அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி.

கிருஷ்ணகிரி: காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளை எந்த சூழ்நிலையிலும் நடைமுறைப்படுத்த முடியாது என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கூறினார்.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயப்பிரகாஷை ஆதரித்து, கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, கிட்டம்பட்டி, பெத்தனப்பள்ளி கிராமங்களில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ், திமுக கொடுத்துள்ள தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்ற முடியாது. குறிப்பாக, காங்கிரஸ் வாக்குறுதியை எந்த சூழலிலும் நடைமுறைக்குக் கொண்டுவர முடியாது.

10 லட்சம் கோடி தேவை... 2022 கணக்கீட்டின்படி இந்தியாவில் 32 கோடி குடும்பங்கள் உள்ளன. இதில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 10 கோடி என்றால்கூட, ஒரு குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் வீதம், 10 லட்சம் கோடி கொடுக்க வேண்டியிருக்கும். இது எப்படி சாத்தியமாகும்.

இந்தியாவில் 60 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் கட்சி, மக்களை ஏமாற்றி எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நோக்கில், நடைமுறைக்கு ஒத்துவராத வாக்குறுதிகளை அளித்துள்ளது.

இதேபோல, திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75-க்கும், சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.500-க்கும் கொடுப்பேன் என கூறுகிறார். இவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருபவை. ஸ்டாலின் எவ்வாறு விலையைக் குறைக்க முடியும்? மீனவர்களின் வாக்குகளைப் பெறவே, கச்சத்தீவு விஷயத்தை பாஜக கையில் எடுத்துக் கொண்டு, கபட நாடகமாடுகிறது.

அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினோம். ஆனால், திமுக அரசு நாங்கள் கொண்டு வந்த திட்டங்களை முடக்கி, மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x