Last Updated : 07 Apr, 2024 03:40 PM

1  

Published : 07 Apr 2024 03:40 PM
Last Updated : 07 Apr 2024 03:40 PM

திருச்சி | மாற்றுப்பாதையில் ஜே.பி.நட்டா ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதி வழங்கி ஐகோர்ட் உத்தரவு

ஜே.பி.நட்டா | கோப்புப்படம்

மதுரை: திருச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தேர்தல் பிரச்சார ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதி வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அவசர வழக்கில், மாற்று பாதையில் அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாஜக நிர்வாகி ராஜசேகரன் தாக்கல் செய்த மனுவில், “நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரம் மேற்கொள்கிறார். இன்று மாலை 4.30 மணி முதல் 7 மணி வரை திருச்சி காந்தி மார்க்கெட் முதல் மலைக்கோட்டை வரை ‘ரோடு ஷோ’ நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக முறையாக அனுமதி கோரி தேர்தல் அலுவலர் மற்றும் காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பிரசாரத்துக்காக பயன்படுத்தப்படும் Isuzu goods வாகனம் நிரந்தரமாக பதிவு செய்யாமல் இருப்பதால் அனுமதி வழங்க இயலாது எனக்கூறி ‘ரோடு ஷோ’வுக்கான் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வாகனம் கடந்த மார்ச் 18-ம் தேதிதான் வாங்கப்பட்டது. இதனை கருத்தில் கொள்ளாமல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் இருந்து மலைக்கோட்டை வரை ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு அவசர வழக்காக விடுமுறை தினமான இன்று நீதிபதி முரளிசங்கர் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில் குமார் ஆஜராகி, “‘ரோடு ஷோ’ நடைபெற தேர்வு செய்யப்பட்ட பாதை பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் நடை பாதையாக உள்ளது. இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் அந்தப் பாதையில், பல்வேறு மத வழிபாட்டுத்தலங்கள் உள்ளன. எனவே, அந்த பகுதியில் அனுமதி வழங்க முடியாது” என அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் கண்ணப்பா ஹோட்டல் முதல் இஎஸ்ஐ மருத்துவமனை வரை மாற்று பாதையில் ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதி வழங்கப்படுவதாக அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி மாற்றுப் பாதையான கண்ணப்பா ஹோட்டல் முதல் இஎஸ்ஐ மருத்துவமனை வரை மாலை 4 மணி முதல் 6 மணி வரை,‘ரோடு ஷோ’ நடத்திக் கொள்ள அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x