Last Updated : 20 May, 2024 10:21 PM

 

Published : 20 May 2024 10:21 PM
Last Updated : 20 May 2024 10:21 PM

13 ஆண்டுக்கு முன்பு 2 வயதில் மாயமான குழந்தையை ஏஐ உதவியுடன் தேடும் சென்னை போலீஸ்

இரண்டு வயதில் காணாமல் போன குழந்தையின் 14 வயது புகைப்படத்தை ஏஐ தொழில்நுட்பத்துடன் காவல்துறை வெளியிட்டுள்ளது.

சென்னை: 13 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் மாயமான 2 வயது மகளை, கண்டுபிடிக்க அவரது தந்தை தொடர்ந்து போராடி வருகிறார்.இந்த பாசப் போராட்டம் அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது. இந்நிலையில், மாயமான சிறுமியின் 14 வயது புகைப்படத்தை ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள மஜித் நகர் வலம்புரி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வங்கி அதிகாரி கணேசன்( 50). இவருடைய 2 வயது மகள் கவிதா, கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ந்தேதி வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார். அதிர்ச்சி அடைந்த கணேசன் மகள் காணாததைக் கண்டு திடுக்கிட்டார். பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை.

இறுதியில், மகள் மாயமானது குறித்து அதே தினத்தில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் குழந்தையை ‘காணவில்லை’ என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சென்னை காவல் ஆணையராக இருந்த திரிபாதி, இந்த வழக்கை துரிதப்படுத்தினார். தனிப்படைகளை அமைத்து தேடினார். ஆனாலும், குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த வழக்கு விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. பின்னர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டு அவர்களும் துப்பு துலக்கினார்கள். ஆனாலும், ஏமாற்றமே மிஞ்சியது. இதையடுத்து சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை என நீதிமன்றத்தில் போலீஸார் வழக்கை முடித்து வைத்தனர். ஆனாலும், மனம் தளராத தந்தை கணேசன் தனது, மகள் கவிதாவை எப்படியும் கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் காவல் துறையின் கதவுகளை தொடர்ந்து தட்டினார். இவ்வாறாக 13 ஆண்டுகள் கடந்தது. இந்நிலையில்தான் சிறுமி மாயமான வழக்கு விவகாரத்தை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு போலீஸார் கையிலெடுத்துள்ளனர்.

தற்போது தொழில்நுட்ப வசதிகள் மேம்பட்டுள்ளதால் அதனை பயன்படுத்தி குழந்தையை தேடும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். 2 வயதில் மாயமான கவிதா புகைப்படத்தை ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தி அவர் தற்போது 14 வயதில் எப்படி இருப்பார்? என்ற தோற்றம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கவிதாவின் பழைய புகைப்படம், ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட புதிய புகைப்படம் ஆகியவற்றை ஒன்றாக இணைத்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு போலீஸார் போஸ்டராக வெளியிட்டுள்ளனர்.

அதில் மாயமான குழந்தை கவிதா பற்றி தகவல் தெரிந்தால் 9444415815, 9498179171 என்ற செல்போன் எண்களை தொடர்புக் கொள்ளலாம் என்றும், சரியான தகவல் தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் போலீஸார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். 2 வயதில் மாயமான மகளை எப்படியும் கண்டு பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் கணேசன் இரவு பகலாக 13 ஆண்டுகளாக காத்திருக்கிறார். இந்த பாசப்போராட்டம் அனைவரது கண்களில் இருந்தும் கண்ணீரை வரவழைத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x