Published : 05 Apr 2024 03:33 PM
Last Updated : 05 Apr 2024 03:33 PM

“நீட் தேர்வு விவகாரத்தில் தேர்தல் நாடகம்!” - காங்கிரஸ் வாக்குறுதிகள் மீது சீமான் விமர்சனம்

சீமான் | கோப்புப்படம்

சென்னை: “நீட் தேர்வை எழுத முடியாமல், தற்கொலை செய்து கொண்ட எத்தனை குழந்தைகளின் வீடுகளில் துக்கம் விசாரித்தது காங்கிரஸ் கட்சி. இவர்கள் ஒன்றைக் கொண்டு வருவார்கள், அதை எதிர்த்தால், விரும்பினால் என்று கூறி பின்வாங்குவார்கள். நாங்கள்தான் நீட் தேர்வை விரும்பவில்லையே. எனவே, இவையெல்லாம் தேர்தல் நாடகம்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், மாநிலங்கள் விரும்பினால் மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும் என்று கூறியிருப்பது தொடர்பாக கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நீட் தேர்வை கொண்டு வந்தது யார்? காங்கிரஸ் கட்சி. தற்போது தேர்தலில் வாக்கு வாங்குவதற்காக, அவ்வாறு கூறுகின்றனர்.

இத்தனை நாட்களாக காங்கிரஸ் நீட் தேர்வு குறித்து பேசவே இல்லை. நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள் கூறித்தானே, ராகுல் காந்தி அனுப்பினார். சரி, இந்த நீட் தேர்வை எழுத முடியாமல், தற்கொலை செய்து கொண்ட எத்தனை குழந்தைகளின் வீடுகளில் துக்கம் விசாரித்தது காங்கிரஸ் கட்சி. இவர்கள் ஒன்றைக் கொண்டு வருவார்கள், அதை எதிர்த்தால், விரும்பினால் என்று கூறி பின்வாங்குவார்கள். நாங்கள்தான் நீட் தேர்வை விரும்பவில்லையே. எனவே, இவையெல்லாம் தேர்தல் நாடகம், என்றார்.

அப்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதாகவும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு அனைத்து சாதியினருக்கு வழங்கப்படும் என்று காங்கிரஸ் கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு, காங்கிரஸ் என்ன நேற்று கட்சி ஆரம்பித்து, இன்றுதான் அரசியலுக்கு வரப்போகிற கட்சியா என்ன? சுதந்திரத்துக்குப் பின்னர் இந்தியாவை 50 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த கட்சி காங்கிரஸ். இத்தனை ஆண்டுகளாக சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் எடுக்கவில்லை?

கடந்த 10 ஆண்டு பாஜக ஆட்சிக்கு முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி ஏன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை? எதன் பேரில் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் மறுக்கப்பட்டதோ, அந்த வழியிலே திருப்பிக் கொடுக்க கொண்டு வரப்பட்டதுதான் இட ஒதுக்கீடு. இதுதொடர்பாக நேருவுக்கும் அம்பேத்கருக்கும் பலமுறை தர்க்கம் நடந்து, அம்பேத்கர் வென்றுதான் இதை கொண்டு வந்தார். அப்படியிருக்கும்போது, மீண்டும் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்று கூறினால் எப்படி?” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x