Published : 05 Apr 2024 02:40 PM
Last Updated : 05 Apr 2024 02:40 PM

“பாஜகவின் 2019 தேர்தல் வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றம்’’ - பிரதமர் மோடி

சுரு(ராஜஸ்தான்): கடந்த 2019-ல் பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது. ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 தொகுதிகளுக்கு வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள முதற்கட்டத் தேர்தலின்போது 12 தொகுதிகளுக்கும், வரும் 26ம் தேதி நடைபெற உள்ள இரண்டாம் கட்டத் தேர்தலின்போது 13 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதைமுன்னிட்டு, சுரு நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், “இந்தியா எப்படி இவ்வளவு வேகமாக வளர்கிறது என ஒட்டுமொத்த உலகமும் இன்று ஆச்சரியப்படுகிறது. இந்திய மண் சற்று வித்தியாசமானது என்பது அவர்களுக்குத் தெரியாது. நாம் என்ன முடிவெடுத்தாலும் அதனை நிறைவேற்ற நம்மால் முடியும். கடந்த 10 ஆண்டுகளில் நாடு மாறிக்கொண்டிருப்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

10 ஆண்டுகளுக்கு முன் நாட்டின் நிலை எவ்வளவு மோசமாக இருந்தது என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? மிகப் பெரிய ஊழல்களில் ஈடுபட்டு காங்கிரஸ் கட்சி நாட்டை கொள்ளையடித்ததால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்த நிலையில் இருந்தது. உலக அளவில் இந்தியாவின் நற்பெயர் குறைந்து கொண்டே வந்தது.

அத்தகைய சூழலில்தான் நாம் ஆட்சிக்கு வந்தோம். கோவிட் போன்ற ஒரு பெரிய நெருக்கடி வந்தபோது, ​​இந்தியா அழிந்துவிடும், அது உலகையும் அழிக்கும் என்று உலகம் நினைக்கத் தொடங்கியது. ஆனால் இந்த நெருக்கடியில் இந்தியர்களாகிய நாம் நமது நாட்டை உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக மாற்றினோம்.

இதுவரை நாம் செய்த வளர்ச்சிப் பணிகள் எல்லாம் வெறும் ட்ரெய்லர்கள்தான் என்பதை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். தற்போதெல்லாம் பெரிய ஹோட்டல்களுக்கு சாப்பிடச் சென்றால் முதலில் பசியைத் தூண்டும் சில உணவு வகைகளை கொடுப்பார்கள். மோடி இதுவரை கொடுத்தது எல்லாம் அத்தகைய பசியைத் தூண்டும் உணவை மட்டும்தான். நாம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.

பாஜக கண்டிப்பாக சொல்வதைச் செய்யும். மற்ற கட்சிகளைப் போல பாஜக வெறும் தேர்தல் அறிக்கையை வெளியிடுவதில்லை. நாங்கள் உறுதிப் பத்திரம் ('சங்கல்ப் பத்ரா') வழங்கி வருகிறோம். 2019 உறுதிப்பத்திரத்தில் நாங்கள் கூறிய பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

முத்தலாக் தடைச் சட்டம் நமது இஸ்லாமிய சகோதரிகளுக்கு உதவுகிறது. முத்தலாக் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் என்பதை எனது இஸ்லாமிய தாய்மார்கள் புரிந்து கொள்ள வேண்டும். மோடி உங்களை மட்டும் காப்பாற்றவில்லை, ஒவ்வொரு இஸ்லாமிய குடும்பத்தையும் மோடி பாதுகாத்துள்ளார்.

2019 பிப்ரவரி 26 அன்று நான் இந்த சுரு நகருக்கு வந்தபோது, அந்த நேரத்தில் நாடு பாலகோட்டில் வான்வழித் தாக்குதலை நடத்தியது. பயங்கரவாதிகளுக்கு நாம் பாடம் கற்பித்தோம். அப்போது நான் பாரத மாதாவை தலைகுணிய விடமாட்டேன் என்று கூறியிருந்தேன். நமது ராணுவம் சர்ஜிக்கல் ஸ்டிரைக், வான்வழித் தாக்குதல் நடத்தியபோது, காங்கிரஸும் அதன் கூட்டணி கட்சிகளும் அதற்கு ஆதாரம் கேட்டனர். நாட்டைப் பிரிப்பதும், ராணுவத்தை அவமதிப்பதும்தான் காங்கிரஸ் கட்சியின் அடையாளம்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x