Last Updated : 03 Apr, 2024 11:12 AM

13  

Published : 03 Apr 2024 11:12 AM
Last Updated : 03 Apr 2024 11:12 AM

“பாஜக கூட்டணியால் பாமக தனித்தன்மையை இழக்காது” - தங்கர் பச்சான் நேர்காணல்

பாமக சார்பில் கடலூரில் அரசியல் களம் கண்டிருக்கும் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் வழங்கிய நேர்காணல்:

களத்தில் நின்று பல ஆண்டுகளாக போராடிய கட்சிக்காரர்கள்; திரைத்துறையில் இருந்து திடீரென்று வந்த நீங்கள் - உங்களுக்கு இடையில் எப்படி இருக்கிறது பிரச்சாரக் களம்?

எந்த சிக்கலும் இல்லை. மகிழ்ச்சியோடு பணியாற்றுகிறார்கள். கட்சிக்குத் தேவை வெற்றி வேட்பாளர். கட்சிக்காரர்களின் வேலையைப் பார்க்கும் போது வெற்றிக்கான நம்பிக்கை கிடைத்திருக்கிறது. குறைந்தபட்சம் இரு தொகுதிகளில் பாமக வெற்றி பெற்றால் அங்கீகாரம் கிடைக்கும். நிச்சயம் அதற்கு மேலும் வெல்வோம்.

மற்ற வேட்பாளர்களைத் தாண்டி, பிரச்சாரத்தின்போது மக்களை நீங்கள் தனித்துவமாக எந்த முறையில் அணுகுகிறீர்கள்?

‘எனக்கு வாக்களியுங்கள்’ என்று மட்டும் கேட்பதில்லை, அரசியல் விழிப்புணர்வு தருகிறேன். ‘தொடர்ந்து தவறு செய்து வருகிறீர்கள், அந்த தவறு மூலம் எப்படி தவறான ஜனநாயகம் உருவாகிறது’ என்பதை எடுத்துச் சொல்கிறேன். ‘எது விருப்பமோ அதைச் செய்யுங்கள்’ என்று கூறுகிறேன். குறிப்பாக ஒன்றை அழுத்தமாகச் சொல்கிறேன். ‘நான் வென்றால், அது உங்கள் வெற்றி; எனக்கான வெற்றி அல்ல’

பாஜக ஆட்சி அமைக்க நேர்ந்தால், அப்போது நீங்களும் எம்பியாக தேர்வாகி செல்லும்பட்சத்தில், மக்களவையில் உங்கள் அணுகுமுறை எப்படி இருக்கும்?

கடலூர் மாவட்டம் தமிழகத்தில் எல்லாவற்றிலும் கடைசி மாவட்டமாக உள்ளது. அதைக் கூடிய வரை முன்னுக்கு கொண்டு வருவது, நடப்புச் சிக்கலைத் தீர்ப்பது. இவற்றையே முதன்மையாக நினைக்கிறேன்!

கடலூர் தொகுதிக்குள் இருக்கும் சாதிய மோதல்களைக் கடந்து, சகோதரத்துவத்தை உண்டாக்க தாங்கள் வைத்திருக்கும் உத்தி என்ன?

ஏற்கெனவே, ‘தமிழ் பாதுகாப்பு இயக்கம்’ மூலம் இதைச் செய்து வந்திருக்கிறேன். தற்போது சாதிய மோதல் இங்கு இல்லை. அதற்கு நானும் ஒரு காரணம். இதுபோன்ற செயல்களால், அனைத்து சமுதாயத்தினரும் என்னை ஏற்றுக் கொள்கின்றனர்.

பட்டியல் இன மக்கள் வசிக்கும் தெருக்களில் முன்பு எல்லாம் பாமக செல்ல முடியாத நிலை இருந்தது. ‘திருமாவளவனை உள்ளே விடக்கூடாது’ என்று கூறியதால், பதிலுக்கு அவர்களும் தடுத்தார்கள். தற்போது அந்த நிலை இல்லை. நான், பாமக கொடியுடன் சென்று வாக்கு கேட்கிறேன்; மகிழ்ச்சியாக வரவேற்கிறார்கள்.

கடலூர் தொகுதிக்கென நீங்கள் வைக்கும் தனிப்பட்ட வாக்குறுதிகள் என்னென்ன?

வாக்குறுதி என்பதைவிட, தொகுதிக்குள் தற்சார்பு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும், முந்திரிக்கான ஆதார விலையை கொண்டு வர வேண்டும். இறக்குமதி கொள்கையால் வெளிநாட்டு முந்திரி உள்ளே வந்து, உள் நாட்டு முந்திரி விலையை வீழ்ச்சியடையச் செய்துள்ளது. அதற்கு முடிவு கட்ட வேண்டும், பலா சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உருவாக்கும் கூடத்தை இத்தொகுதியில் ஏற்படுத்த வேண்டும்.

‘என்எல்சியை வெளியேற்றுவோம்’ என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளீர்கள். இதனால், இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு பாதிக்காதா?

இந்த மண்ணின் மைந்தருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுத்தால் அது இருக்கும்; இல்லை என்றால் அது வெளியே போகும். எங்கோ இருப்பவர்களைக் கொண்டு வந்து வேலைவாய்ப்பு கொடுக்க நாங்களா கிடைத்தோம்!

உயர்வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்த பாமக, தற்போது பாஜக கூட்டணியில் இருப்பது ‘பொருந்தாக் கூட்டணி’ என்கிறார்களே?

பாமகவில் நான் சேர்ந்தபோது, ‘நீங்கள் தனித்துவத்தை இழக்க வேண்டாம்; நீங்கள் நீங்களாக இருந்தால் தான் எங்களுக்கு பெருமை’ என்று கூறினர். அதேபோல் தான்; பாமக அதன் தனித்தன்மையை, கொள்கையை என்றும் விட்டுக் கொடுக்காது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x