Published : 02 Apr 2024 05:47 AM
Last Updated : 02 Apr 2024 05:47 AM

சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் 2023-24-ம் நிதியாண்டில் 2,829 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை

சென்னை: ஐ.சி.எஃப் ஆலையில் 2023-24-ம் நிதியாண்டில் வந்தே பாரத் ரயில் உள்பட பல்வேறு வகைகளில் 2,829 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. உலக அளவில் ரயில் பெட்டி தயாரிப்பில் முக்கியமான தொழிற்சாலையாக சென்னை ஐ.சி.எஃப் (ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை) திகழ்கிறது.

இங்கு தற்போதுவரை பல்வேறு வகைகளில் 73,000-க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆலையில் தற்போது வந்தே பாரத் ரயில் தயாரிப்பில் கவனம் செலுத்தப்படுகிறது.

இங்கு 60-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரித்து ரயில்வே வாரியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில் 50-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் பல்வேறு முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

இங்கு சாதாரண வந்தே பாரத் ரயிலான அம்ரித் பாரத் ரயில், வந்தே மெட்ரோ ரயில் உள்ளிட்ட ரயில்கள் தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அம்ரித் பாரத் ரயில் ஏற்கெனவே இரண்டு ரயில்கள் தயாரித்து அனுப்பிய நிலையில், மேலும் அம்ரித் பாரத் ரயில் தயாரிக்கும் பணியும் நடைபெறுகிறது. இதுதவிர, வந்தே மெட்ரோ ரயில் தயாரிப்பு பணியும் நடைபெறுகிறது.

இந்நிலையில், சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் 2023-24-ம் நிதியாண்டில் வந்தே பாரத் ரயில் பெட்டிகள் உள்பட பல்வேறு வகைகளில் 2,829 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ஐ.சி.எஃப் அதிகாரிகள் கூறியதாவது: கடந்த உற்பத்தி ஆண்டில் (2023-24) 2,829 ரயில் பெட்டிகளை ஐ.சி.எஃப் தயாரித்துள்ளது. இது முந்தைய உற்பத்தி ஆண்டின் எண்ணிக்கையான 2,072-ஐ விட அதிகமாகும்.

இந்த எண்ணிக்கையில் 1,091 வந்தே பாரத் ரயில் பெட்டிகள், மின்தொடர் ரயில் பெட்டிகள், நெடுந்தொலைவு மின்தொடர் ரயில் பெட்டிகள் போன்றவை அடங்கும். 1738 இதர எல்.எச்.பி வகை (நவீன பெட்டிகள்) ரயில் பெட்டிகளும் கடந்த ஆண்டில் தயாரிக்கப்பட்டுள்ளன.

8 பெட்டிகள் கொண்ட 45 வந்தே பாரத் ரயில் தொடர்கள் மற்றும் 16 பெட்டிகள் கொண்ட 6 வந்தேபாரத் ரயில் தொடர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை ஐ.சி.எஃப்பில் இதுவரை தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் தொடர்களின் அதிக எண்ணிக்கையாகும்.

இதுதவிர, 22 ரயில் பெட்டிகள் கொண்ட இரண்டு அம்ரித் பாரத் ரயில் தொடர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ரயில் தட பாதுகாப்பு ஆய்வுக்காக முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 19 தானியங்கி ஆய்வு ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. லக்னோவில் உள்ள ரயில் வடிவமைப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்துக்காக முதன்முறையாக ஆசிலோகிராப் மானிட்டரிங் ரயில் பெட்டி தயாரிக்கப்பட்டுள்ளது.ஐ.சி.எஃப்-ல் 2024-25-ம் நிதியாண்டில் 3,000 பெட்டிகள்தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

2023-24-ம் நிதியாண்டில் அதிக பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்தற்காக, ஐ.சி.எஃப் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளைப் பாராட்டி அவர்களுக்கு ஐ.சி.எஃப் பொதுமேலாளர் யு. சுப்பா ராவ் இனிப்புகள் வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x