Published : 01 Apr 2024 05:51 AM
Last Updated : 01 Apr 2024 05:51 AM

விவசாயிகளுக்கு நன்மை செய்தது அதிமுக அரசுதான்: எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பெருமிதம்

படம்: எக்ஸ்

கடலூர்: விவசாயிகளுக்கு நன்மை செய்தது அதிமுக அரசுதான் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறினார்.

சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள தனியார் திருமண அரங்கத்தில் நேற்று விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பழனிசாமியை, கரும்பு விவசாயிகள், கொள்ளிடம் கீழனை பாசன விவசாயிகள், நெய்வேலி என்எல்சி நிலம் எடுப்பால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பல்வேறு விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று, தங்களது பிரச்சினைகளை விளக்கினர்.

தொடர்ந்து, நிகழ்ச்சியில் பழனிசாமி பேசியதாவது: என்எல்சி நிறுவனம் வேளாண் நிலங்களை தொடர்ந்து கையகப்படுத்துகிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டும், ஏற்கெனவே எடுக்கப்பட்ட நிலத்துக்கு உரிய இழப்பீட்டுத் தொகை பெற்றுத்தர வேண்டும்,நிலம் கொடுத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தர வேண்டுமென்று விவசாயிகள் தெரிவித்தனர்.

அவர்களது கோரிக்கைகளை அதிமுக வேட்பாளர், மத்திய அரசிடம் தெரிவித்து, உரிய அழுத்தம் கொடுத்து நிறைவேற்றுவார். அதேபோல, அடுத்து தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமையும்போது, மாநில அரசும் தேவையான உதவிகளை செய்யும்.

திமுக அரசு பதவி ஏற்றவுடன், சேத்தியாதோப்பு சர்க்கரை ஆலையில் அரவைத் திறனை குறைத்துவிட்டார்கள். அரசாங்கமே விவசாயிகளின் கரும்பை தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு விற்பனை செய்ய உத்தரவிட்டுள்ளது. பிறகு எப்படி அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் லாபத்தில் இயங்கும்?

சர்க்கரை ஆலைகள் நஷ்டத்தில் இயங்கும் நிலைக்கு தள்ளப்பட்டதற்கு, இங்குள்ள விவசாயிகளின் கரும்புகளை அரவை செய்யாததே காரணமாகும். திமுக அரசின் வேளாண் பட்ஜெட்டில் நன்மை பயக்கும் திட்டங்கள் எதுவுமே இல்லை. வேளாண்மை மானியக் கோரிக்கையில் உள்ள திட்டங்களையே மாற்றி, மாற்றி சொல்லி வருகின்றனர்.

திமுக ஆட்சிக்கு வந்தால் நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500,கரும்புக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் எனத் தெரிவித்தனர். ஆனால் இதுவரை வழங்கவில்லை. விவசாயிகளுக்கு நன்மைசெய்த அரசு அதிமுக அரசு தான்.

விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்குவதாக திமுக அரசு அறிவித்தது. ஆனால் எங்குமே வழங்கவில்லை. சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும். இவ்வாறு பழனிசாமி பேசினார்.

நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, செல்வி ராமஜெயம், எம்எல்ஏக்கள் கே.ஏ.பாண்டியன், அருண்மொழித்தேவன், முன்னாள் எம்எல்ஏ முருகுமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x