Published : 31 Mar 2024 07:25 AM
Last Updated : 31 Mar 2024 07:25 AM
கோவை: மத்திய அரசு மீது தொடர்ந்து அவதூறு பரப்புவதை முதல்வர் ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும் என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவைதெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக அரசை விமர்சித்து முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டால், அவர்களை கைது செய்ய குஜராத்வரை விமானத்தில் செல்கிறது தமிழக காவல்துறை.
காவல் துறையை, தங்களது ஏவல் துறையாகப் பயன்படுத்தி வரும் முதல்வர் ஸ்டாலின், அமலாக்கத் துறை, வருமானத் துறை செயல்பாடுகள் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது.
அமலாக்கத் துறை, வருமான வரித்துறை நடவடிக்கைகள்அனைத்தும் சட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்படுகின்றன. ஆதாரங்களின் அடிப்படையில் நீதிமன்றங்கள்தான் கைது போன்ற அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கின்றன. ஆதாரங்கள் இல்லாமல் இரு மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் ஆம்ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால், தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதா, ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் உள்ளிட்டோரை கைது செய்ய முடியாது.
இந்தியாவில் நீதித்துறை, உலகின் எந்தநாடுகளிலும் இல்லாத அளவுக்கு சுதந்திரமாகவும், அரசின் தலையீடு இல்லாமல் இயங்கக் கூடியது.
தனிப்பெரும்பான்மையுடன் 10 ஆண்டுகள் தொடர்ந்து அதிகாரத்தில் இருக்கும் பாஜக அரசும், பிரதமர் மோடியும் ஜனநாயகப் பாதையில் இருந்து ஓர் அங்குலம்கூட நழுவி விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். மத்திய அரசு மீது அவதூறு பரப்புவதை முதல்வர் ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT