Published : 30 Mar 2024 10:32 AM
Last Updated : 30 Mar 2024 10:32 AM

“மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது!” - முதல்வர் ஸ்டாலின் பதிலடி

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப் படம்

சென்னை: “மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது!. தமிழர்கள் எப்படி நம்புவார்கள்?. கெட்டிக்காரன் புளுகாவது எட்டு நாள் நிற்கும்; ஆனால், மோடியின் கண்ணீர்?.” என்று கூறி பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

தமிழக பாஜக பூத் தலைவர்களுடன் நமோ செயலி வாயிலாக ‘எனது பூத், வலிமையான பூத்’ என்ற பெயரில் பிரதமர் மோடி நேற்று மாலை கலந்துரையாடினார். அப்போது, “தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என ஒவ்வொரு கருத்துக்கணிப்புகளும் தெரிவிக்கிறது. திமுக அரசின் மீது மக்கள் வெறுப்பின் உச்சத்துக்கு சென்றிருக்கிறார்கள் என தமிழக மக்களை நான் பார்க்கும் போது தெரிகிறது. மத்திய அரசின் நல்ல திட்டங்களை மக்களிடம் சென்று சேர விடாமல், திமுக அரசு தடுத்து நிறுத்துகின்றனர். தடுத்து நிறுத்த முடியாத திட்டங்களில், அவர்களது ஸ்டிக்கரை ஒட்டுகிறார்கள்.” என்று பிரதமர் மோடி விமர்சித்து இருந்தார்.

பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு முதல்வர் ஸ்டாலின் தற்போது பதில் கொடுத்துள்ளார். அதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு:

"நேற்று மாலைச் செய்தி: தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என வருந்துகிறார் பிரதமர் மோடி!

நேற்று காலைச் செய்தி: அழகிய தமிழ்ச்சொல் 'வானொலி' இருக்க ஆகாசவாணி என்பதே பயன்பாட்டுக்கு வரும்.

மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது!. தமிழர்கள் எப்படி நம்புவார்கள்?. கெட்டிக்காரன் புளுகாவது எட்டு நாள் நிற்கும்; ஆனால், மோடியின் கண்ணீர்?.

ஒருபக்கம் கண்ணைக் குத்திக் கொண்டே, மறுபக்கம் கண்ணீர் வடிப்பது என்ன மாதிரியான தமிழ்ப் பாசம்?. கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் பரப்புரை செய்த அவர் இப்போது இந்தியில் மட்டுமே பேசுவதன் மர்மம் என்ன?

பிரதமர் மோடி அவர்களே... கருப்புப் பணம் மீட்பு, மீனவர்கள் பாதுகாப்பு, 2 கோடி வேலைவாய்ப்பு, ஊழல் ஒழிப்பு போல் காற்றில் கரைந்த உங்கள் கேரண்டிகளில் ஒன்றுதான், அகவை ஐந்தான விமானங்களில் தமிழில் அறிவிப்பு!

விமானங்களில் மட்டுமல்ல; தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் கூட தமிழிலோ ஆங்கிலத்திலோ பேசும் பாதுகாப்புப் படையினர் இல்லை.

"எங்கும் இந்தி! எதிலும் இந்தி!" என மாற்றியதுதான் மோடி அரசின் அவலச் சாதனை!. தமிழ்த்தோல் போர்த்தி வரும் வஞ்சகர் கூட்டத்துக்கு ஏமாற்றமே பரிசாகும்!" என்று கடுமையாக சாடியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x