Published : 30 Mar 2024 08:51 AM
Last Updated : 30 Mar 2024 08:51 AM

“திமுக கூட்டணி வலுவாக இருப்பதாக கூறுவது மாயை...” - எடப்பாடி பழனிசாமி சிறப்பு நேர்காணல்

திமுக கூட்டணி வலுவாக இருப்பதாகக் கூறப்படுவது மாயை என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்திருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்துக்கு நடுவே அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது அரசு இல்லத்தில் `தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி:

மக்களவைத் தேர்தலுக்காக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பிரச்சாரம் செய்து வருகிறீர்கள். உங்களது பிரச்சாரத்துக்கு மக்களின் வரவேற்பு எப்படி இருக்கிறது?

பதில்: திருச்சியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினோம். அப்போது அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். அன்றைய கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கூடினர். அப்போதே எங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. நான் பல்வேறு தேர்தல்களைப் பார்த்திருக்கிறேன். நானே 10 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். இப்போதைய நிலையில் எங்கள் கூட்டணி வெற்றி பெறுவதையே மக்கள் விரும்புகின்றனர்.

தற்போதைய மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையே போட்டி நிலவுகிறதா அல்லது அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே போட்டி ஏற்பட்டிருக்கிறதா? தேர்தல் கணித விதிகளின்படி திமுக கூட்டணி வலுவாக இருப்பதாகக் கூறப்படுகிறதே?

பதில்: திமுக கூட்டணி வலுவாக இருப்பதாகக் கூறப்படுவது மாயை. கள நிலவரங்கள் வேறு மாதிரியாக உள்ளன. தற்போதைய தேர்தலில் ஆளும் திமுக பண பலத்தையும், ஆட்கள் பலத்தையும் பயன்படுத்தக்கூடும். ஆனால், மக்களின் ஆதரவுடன் நாங்கள் அமோக வெற்றி பெறுவோம். மக்களிடையே மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு எதிரான மனநிலை இருக்கிறது. எனவே, எங்கள் கூட்டணிக்கு ஆதரவாகவே மக்கள் வாக்களிப்பார்கள்.

உங்கள் பிரச்சாரத்தில் பாஜக, பிரதமர் மோடியைவிட, திமுகவை அதிகம் விமர்சிப்பது ஏன்?

2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றிருந்தது. அப்போது அந்தக் கட்சி தமிழகத்தில் 5 இடங்களில் மட்டுமே போட்டியிட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை, அதிமுக, திமுக ஆகியவை மட்டுமே பிரதானக் கட்சிகள். இரு கட்சிகளும் தமிழகத்தில் அடுத்தடுத்து ஆட்சி நடத்தியுள்ளன. பல்வேறு மக்களவைத் தேர்தல்களில் இரு கட்சிகளும் கணிசமான எம்.பி.க்களைப் பெற்றுள்ளன.

எங்களைப் பொறுத்தவரை திமுகவே எங்களது பிரதான எதிரி. அந்தக் கட்சியை விமர்சிப்பது இயல்பானதுதானே. மேலும், தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக கூட்டணிக்கும், திமுக கூட்டணிக்கும் இடையே மட்டுமே போட்டி நிலவுகிறது. நாடாளுமன்றத்தில் தமிழக மக்களுக்காக யார் குரல் கொடுக்கிறார்கள், யார் சிறப்பாக பணியாற்றுகிறார்கள் என்பதே முக்கியமானது.

கடந்த 10 ஆண்டுகள் மத்தியில் பாஜக ஆட்சி நடத்தியுள்ளது. எந்த துறைகளில் பாஜக அரசு தோல்வி அடைந்திருக்கிறது?

பதில்: கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசம், குஜராத் மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டுக்காக மத்திய அரசு பெரிய திட்டங்கள் எதற்கும் ஒப்புதல் வழங்கவில்லை. தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பங்களிப்புகூட கிடைக்கவில்லை.

பிரதமர் வேட்பாளரை முன்னிலைப்படுத்தாத கூட்டணிக்கு மக்கள் வாக்கு அளிப்பார்களா?

பதில்: தமிழகத்தில் அதிமுக வலுவான கட்சி. எங்களது நிறுவனர் எம்ஜிஆர் வலுவான அஸ்திவாரத்தை அமைத்து தந்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கட்சியை மேலும் வலுப்படுத்தி உள்ளார். 2014 மக்களவைத் தேர்தலில் கூட்டணி இல்லாமலேயே நாங்கள் வெற்றி பெற்றோம். தற்போதைய மக்களவைத் தேர்தலில் திமுக ஏராளமான கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருக்கிறது.

நாங்கள் தேமுதிக, எஸ்டிபிஐ, புதிய தமிழகம் உள்ளிட்ட ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளோம். இந்த கூட்டணி எங்களை மேலும் வலுப்படுத்தி இருக்கிறது. நமது நாடு பன்முகத்தன்மை கொண்டது. நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் தனித்தன்மை வாய்ந்தவை. மாநிலங்களின் நலன்கள், விருப்பங்களை பிராந்தியக் கட்சிகளால் மட்டுமே பூர்த்திசெய்ய முடியும்.

நாடு வளர்ச்சி அடைய, மாநிலங்களில் தேசியக் கட்சிகள் ஆட்சி நடத்த வேண்டும் என்று கூறுவது அர்த்தமற்றது. பெரும்பாலான நேரங்களில் மாநிலங்களின் நலன்களை தேசியக் கட்சிகள் புறக்கணிக்கின்றன. அதிமுக உள்ளிட்ட பிராந்தியக் கட்சிகளே மாநில மக்களின் நலன்களை முன்னிறுத்துகின்றன. மாநிலத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபடுகின்றன.

எனவே, மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்த வேண்டிய அவசியமில்லை. தற்போதைய தேர்தலில் பல்வேறு கட்சிகள் பிரதமர் வேட்பாளர் இல்லாமலேயே போட்டியிடுகின்றன. மேற்குவங்கம் (திரிணமூல் காங்கிரஸ்), ஒடிசா (பிஜு ஜனதா தளம்), ஆந்திராவை (ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்) சேர்ந்த பிராந்தியக் கட்சிகள், பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தாமல் மக்களவைத் தேர்தலை சந்திக்கின்றன.

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு கட்சிகள் பெறும் எம்.பி.க்கள் பலத்தைப் பொறுத்து, புதிய பிரதமர் பதவியேற்பார். நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுப்பதில் அதிமுக முக்கியப் பங்கு வகிக்கும். அவர் தமிழ்நாட்டின் நலன்கள், கோரிக்கைகளுக்கு செவிகொடுப்பவராக இருப்பார்.

உங்களது தேர்தல் அறிக்கையில் மாநிலங்களின் வருவாயை பெருக்க பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டு உள்ளன. தேசியக் கட்சியின் ஆதரவு இல்லாமல் உங்களது பரிந்துரைகளை நிறைவேற்ற முடியுமா?

பதில்: மத்திய நிதிக் கொள்கையில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். இது தொடர்பாக நாங்கள் அளித்த பரிந்துரைகளை பொருளாதார நிபுணர் சி.ரங்கராஜன் உள்ளிட்டோர் ஏற்கெனவே முன்மொழிந்துள்ளனர். மத்திய நிதிக் கொள்கையில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

குறிப்பாக, ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்னர் மாநிலங்களின் வருவாய் குறைந்திருக்கிறது. எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசில் இடம்பெற வேண்டும் என்பது அவசியமற்றது. ஒருமித்த கருத்துடைய கட்சிகளின் ஆதரவைத் திரட்டி, எங்களது கோரிக்கைகளை அமல்படுத்துமாறு வலியுறுத்துவோம்.

2023 ஜூலையில் நடைபெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக பங்கேற்றது. அடுத்த 2 மாதங்களில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? முன்னாள் முதல்வர்கள் அண்ணா, ஜெயலலிதாவை பாஜக மாநிலத் தலைமை விமர்சித்ததால் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதா?

பதில்: இது மட்டுமே காரணம் கிடையாது. பாஜக, காங்கிரஸ் ஆகியவை தேசியக் கட்சிகளாக உள்ளன. மக்களவைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு இந்தக் கட்சிகள் தேசிய அளவில் மட்டுமே முடிவுகளை எடுக்கின்றன.

தேசியக் கட்சிகளின் கூட்டணியில் இடம்பெற்றால் எங்களால் சுதந்திரமாகச் செயல்பட முடியாது. உதாரணத்துக்கு, காவிரி நதிநீர் பிரச்சினையை எடுத்துக் கொள்ளுங்கள். தேசியக் கட்சிகளைப் பொறுத்தவரை, நடுநிலையுடன் செயல்படவே விரும்புகின்றன.

ஆனால், எங்களைப் பொறுத்தவரை தமிழகத்தின் உரிமை, தமிழக விவசாயிகளின் நலன்களில் மட்டுமே அக்கறை செலுத்துகிறோம். நாங்கள் பிராந்தியக் கட்சி. காவிரி நதி எங்களது வாழ்வாதாரம். உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், மத்திய அரசு தீர்ப்பை அமல்படுத்த தாமதம் செய்தது. இந்தப் பிரச்சினையில் எங்களது 37 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் 22 நாட்கள் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தினர். அதன் பிறகே காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன் ஆகியோர் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளனர். இதனால் அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படுமா?

பதில்: அதிமுக தொண்டர்கள் ஒற்றைத் தலைமையின் கீழ் ஒற்றுமையாக உள்ளனர். அவர்கள் மக்களவைத் தேர்தலை உறுதியுடன் எதிர்கொள்வர். எந்த வகையிலும் அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படாது.

தற்போதைய மக்களவைத் தேர்தலில் பாஜக இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் என சில கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டிருக்கிறது. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: அத்தகைய கருத்துக் கணிப்புகள் ஜோடிக்கப்பட்டவை. அந்த கருத்து கணிப்புகளை நாங்கள் நம்பவில்லை, ஏற்கவில்லை. நாங்கள் நம்பிக்கையுடன் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளோம். எங்களது வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்வோம்.

- டி.ராமகிருஷ்ணன் & டி.சுரேஷ் குமார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x