Published : 29 Mar 2024 05:45 AM
Last Updated : 29 Mar 2024 05:45 AM
காஞ்சிபுரம்: தமிழ்நாடு விவசாயிகள் இயக்கத்தின் அமைப்பாளர் அருங்குன்றம் தேவராஜன், காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
வேட்பு மனுக்கள் பரிசீலனை நேற்று நடைபெற்றது. அப்போது இவரது மனுவில் வருமான வரி சம்பந்தப்பட்ட வினாக்களைக் கொண்ட சில இடங்களில் இல்லை என்பதற்கு பதில் கோடு போட்டுள்ளார்.
இந்நிலையில் இவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு பரிசீலனையின்போது மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பான காரணத்தை கேட்டபோது வேட்பு மனுவில் இல்லை என்று எழுத வேண்டிய இடத்தில் கோடு போட்டதால் நிராகரித்திருப்பதாக கூறியுள்ளனர்.
இந்நிலையில் இதனை எதிர்த்து தமிழ்நாடு விவசாயிகள் இயக்கம் சார்பில் நீதிமன்றம் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து இந்த இயக்கத்தின் அமைப்பாளர் அருங்குன்றம் தேவராஜன் கூறும்போது, “நான் கடந்த 2016, 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் உத்திரமேரூர் தொகுதியில் போட்டியிட்டுள்ளேன்.
2019 மக்களவைத் தேர்தலில் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டேன். நான் விவசாயி. வருமான வரி செலுத்தும் அளவுக்கு எனக்கு வருமானம் இல்லை. வருமான வரி தொடர்பான விவரங்கள் கேட்டிருந்த கட்டம் மிகச் சிறியதாக இருந்தது. அதில் இல்லை என்பதை மிகச் சிறியதாக சுருக்கி எழுத வேண்டும். அதற்கு பதிலாக கோடு போட்டிருந்தோம்.
பொதுவாக விண்ணப்பம் நிரப்பும் போது இல்லை என்னும் இடத்தில் கோடுபோடுவது வழக்கமான நடை முறை. கடந்த முறை இதுபோல் கோடு போட்டதற்கு திமுக சார்பில் வந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்யக் கோரினர்.
அப்போது எனது மனு தேர்தல் நடத்தும் அலுவலரால் ஏற்கப்பட்டது. ஆனால் தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது. இதுஜனநாயக விரோத செயல். மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளேன் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT