Published : 17 Feb 2018 07:34 AM
Last Updated : 17 Feb 2018 07:34 AM

காவிரி நதிநீர் குறித்த உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பு தமிழகத்தின் சாகுபடி பரப்பை மேலும் குறைக்கும்- டெல்டா மாவட்ட விவசாயிகள் கருத்து

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தமிழகத்துக்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு உள்ளதால் தமிழகத்தின் சாகுபடி பரப்பு மேலும் குறையும் அபாயம் ஏற்படும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஆறுபாதி கல்யாணம்:

காவிரி பிரச்சினை மற்றும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால் கடந்த 15 ஆண்டுகளாகவே தமிழகத்தில் சாகுபடி பரப்பு தொடர்ந்து ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில், தற் போது உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்பது, தமிழகத்தின் சாகுபடி பரப்பை மேலும் குறைக்கும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சாமி.நடராஜன்: ஏற்கெனவே இருந்ததைக் காட்டிலும், 14 டிஎம்சி குறைக்கப்படுள்ளது. இது, தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். உச்ச நீதிமன்றத்தின் முழு அமர்வுக்கு இந்த வழக்கை மாற்றக் கோரி தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும்.

பட்டுக்கோட்டை ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் வா. வீரசேனன்: ஏற்கெனவே, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி கூட கர்நாடகம் தண்ணீர் தந்ததில்லை. கடந்த ஆண்டுகூட 115 டிஎம்சி தான் தந்தது.

இனி, சுத்தமாக கர்நாடகம் தண்ணீர் தராது. இதனால், பெருமளவு பாதிக்கப்படப்போவது கல்லணைக் கால்வாய் பாசனப் பகுதிதான். இங்கு மழை அளவும் குறைவு. நிலத்தடி நீரும் கீழே சென்றுவிட்டது. தமிழ்நாடு அரசு இந்த வழக்கை, சரியான முறை யில் நடத்தவில்லை என்பதே விவசாயிகளின் குற்றச்சாட்டு.

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் வெ. ஜீவக்குமார்: இந்தத் தீர்ப்பு, தமிழ்நாட்டுக்கு கொடுக்கப்பட்ட தண்டனையாகவும், கர்நாடகத்துக்கு கொடுக்கப்பட்ட அன்பளிப்பாகவும் உள்ளது. தமிழகத்தில் 20 மாவட்டங்களுக்கு குடிக்கத் தண்ணீர் கேட்கும்போது, பெங்களூரு நகரின் தேவைக்காக கூடுதலாக 14 டிஎம்சி அளிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்.

காவிரி பாதுகாப்பு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் சுந்தரவிமலநாதன்:

இனியும் மத்திய அரசு இதில் அரசியலுக்கு அப்பாற்பட்டு நடுநிலையோடு உச்ச நீதிமன்றம் அளித்திருக்கிற உத்தரவை அடிப்படையாக கொண்டு மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். தமிழக விவசாயிகள் எதிர்பார்த்தது நடுவர் மன்றம் அளித்த 205 டிஎம்சி தண்ணீரை விட கூடுதலாக 50 டிஎம்சி தண்ணீராவது கிடைக்கும் என எதிர்பார்த்தோம்.

அதைவிட குறைவாக இப் போது அளித்திருப்பது எங்களுக்கு ஏமாற்றமாக உள்ளது.

காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் காவிரி தனபாலன்: 10 ஆண்டுகள் தாமதமாக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பால் தமிழகத்துக்கு பாதிப்புதானே தவிர சாதகம் எதுவும் அல்ல. இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒரு லட்சம் ஏக்கர் விவசாயம் கைவிடப்படும் நிலை ஏற்படும். ஆண்டுக்கு ரூ.500 கோடி உற்பத்தி இழப்பு ஏற்படும்.

கல்லணைக் கால்வாய் விவசாய பாசனதாரர் சங்கத் தலைவர் அத்தாணி ராமசாமி: தமிழ்நாட்டில் நிலத்தடி நீரின் அளவு கடுமையாக குறைந்துள்ளது.

காவிரி தண்ணீரும் குறைக்கப்படுவதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லணைக் கால்வாய் மூலம் தண்ணீர் பாயக்கூடிய 28 ஆயிரம் ஏக்கருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x