Last Updated : 27 Mar, 2024 11:36 AM

1  

Published : 27 Mar 2024 11:36 AM
Last Updated : 27 Mar 2024 11:36 AM

‘நின்றபடியே 15 மணி நேரம்...’ - வேலைக்காக மலேசியா சென்ற தமிழருக்கு கொடுமை

மணவாளன்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஒருவர் வேலைக்காக மலேசிய நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவருக்கு கொடுமை இழைக்கப்பட்ட நிலையில், மீண்டும் அவர் சொந்த ஊருக்குத் திரும்ப முயற்சித்து வருகிறார். அவரை அங்குள்ள நிறுவனம் அனுப்ப மறுத்து வருகிறது.

அவரை திருப்பி அனுப்புவதற்காக அவரது குடும்பத்தினர் ரூ.1.50 லட்சம் அனுப்பியும், இதுவரை அவரை திருப்பி அனுப்பாமல் காலம் கடத்தி வருவதாக மலேசிய நிறுவனம்மீது அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் வடதெரசலூரைச் சேர்ந்தவர் மணவாளன் ( 46 ). இவர், கள்ளக்குறிச்சியில் உள்ள வெளிநாடுகளுக்கு வேலையாள் அமர்த்தும் முகவர் மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் மலேசியா சென்றுள்ளார்.

முறையான 8 மணி நேரப் பணி, ப்ளம்பர் வேலை என்று கூறி, அவரை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சென்றவருக்கு வேலை மாற்றிக் கொடுக்கப்பட்டதோடு, 15 மணி நேர வேலை கொடுத்துள்ளனர். சாலையோர உணவகம் ஒன்றில் பணி செய்ய வைக்கப்பட்டுள்ளார். நாள்தோறும் தொடர்ச்சியாக நின்று கொண்டே இருக்க வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டு, வேலை வழங்கப்பட்டுள்ளது. இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட மணவாளன், மீண்டும் சொந்த ஊருக்கேசெல்வதாக மலேசிய நிறுவன உரிமையாளரிடம் கூறியுள்ளார்.

ஆனால் உரிமையாளரோ, உடனே அனுப்பி வைக்க இயலாது; உங்களை மீண்டும் அனுப்ப வேண்டுமானால் ரூ.1.50 லட்சம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து மணவாளன், வடதெரசலூரில் உள்ள குடும்பத்தினரை தொடர்பு கொண்டு இதுபற்றி கூறி, ரூ.1.50 லட்சம் அனுப்புமாறு கோரியுள்ளார். அதன்படி அவரது குடும்பத் தினரும், 3 மாதங்களுக்கு முன் ரூ.1.50 லட்சம் பணம் அனுப்பியுள்ளனர். ஆனால் இதுநாள் வரை மணவாளனை திருப்பி அனுப்ப மலேசிய நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மணவாளன்

இதனிடையே மலேசியாவில் செயல்படும் மனித உரிமைகள் அமைப்பின் நிர்வாகி மருத்துவர் கமலநாதன் என்பவர், மணவாளனின் நிலை குறித்து அறிந்து, அவரை அந்த நிறுவனத்திடமிருந்து மீட்டு, தற்போது மனித உரிமை அமைப்பு மூலம் அந்நிறுவனத்தை அணுகி, அவரது பாஸ்போர்ட் உள்ளிட்டவைகளைப் பெற்று, மணவாளனுக்கு சட்ட ரீதியாக உள்ள பிரச்சினைகளை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, “தமிழ்நாட்டில் இருந்து பலர் இதுபோன்று அழைத்து வரப்பட்டு, மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர். எனவே முகவர்களை நம்பி வருவது ஆபத்துக்குரியதாக உள்ளது. இது போன்ற பலர் இங்கு சிக்கியுள்ள நிலையில், அவர்களை சொந்த நாட்டுக்கு அனுப்ப நீதிமன்றம் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இது குறித்த விழிப்புணர்வை, நம்நாட்டில் உள்ள வெளிநாடு வேலைநாடுநர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

இந்த நிலையில் வடதெரசலூரில் உள்ள மணவாளனின் மனைவி பாரதியிடம் கேட்டபோது, “என் கணவர், மலேசியா சென்று 7 மாதங்கள் ஆகின்றன. அங்கு, காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை வேலை பார்க்க சொல்லி கொடுமைப் படுத்துகின்றனர். இங்குள்ள முகவரிடம் சென்று கேட்டால், உங்களது கணவர் மலேசியாவில் இருந்து திரும்பி விட்டார். விரைவில் உங்கள் வீட்டுக்கு வந்து விடுவார் என்று கூறுகின்றனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க இருக்கிறோம்” என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x