Published : 27 Mar 2024 06:18 AM
Last Updated : 27 Mar 2024 06:18 AM

இறுதி ஊர்வலத்தின்போது மலர் மாலைகளை சாலைகளில் வீசுவோர் மீது கடும் நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் ஒருவரது இறப்பின் காரணமாக நடந்த இறுதி ஊர்வலத்தின்போது மலர் மாலைகள் சாலையில் வீசப்பட்டதால் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் வழுக்கி விழுந்து இறந்து விட்டதாகவும், எனவே, இதுபோன்ற அத்துமீறல்களை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அன்புச்செல்வன் என்பவர், கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பரில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார்,

அதையடுத்து இதுதொடர்பாக தாமாக முன்வந்து வழக்காக விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இதுகுறித்து தமிழக அரசு விதிமுறைகளை வகுக்க உத்தரவிட்டிருந்தது. நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில், இறுதி ஊர்வலத்தின்போது மலர் மாலைகளை வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலைகளில் வீசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்பி-க்களுக்கு கடந்த மார்ச் 20-ல் டிஜிபி பிறப்பித்துள்ள சுற்றறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருந்ததாவது:

இறந்தவர்களின் இறுதி ஊர்வலம் எந்த வழியாக செல்கிறது என்பதை முன்கூட்டியே போலீஸுக்கு தெரிவிக்க வேண்டும். அந்த வழித்தடத்தில் போக்குவரத்தை போலீஸார் ஒழுங்குபடுத்தி கொடுக்க வேண்டும்.

இறந்தவரின் உடல் மீது போடப்படும் மாலைகள், மலர்வளையங்களை வீட்டுக்கு அருகிலேயே பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும். இறுதி ஊர்வலத்தின்போது அதிக அளவில் மலர் மாலைகளை கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது. குறிப்பாக, அந்த மாலைகளை பொது போக்குவரத்துக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக சாலைகளில் வீசியெறிந்து செல்லக்கூடாது.

சட்டம் - ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போலீஸார் இறுதி ஊர்வலத்துக்கான நிபந்தனைகளை விதித்து அதை முறையாக கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும்.

இந்த நிபந்தனைகளை மீறுவோர் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதையடுத்து நீதிபதிகள், டிஜிபியின் இந்த சுற்றறிக்கையை போலீஸார் தீவிரமாக அமல்படுத்துவர் என நம்புவதாகக் கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x