Last Updated : 26 Mar, 2024 10:07 PM

1  

Published : 26 Mar 2024 10:07 PM
Last Updated : 26 Mar 2024 10:07 PM

பாஜகவுடன் திமுக கள்ளக் கூட்டணி - பழனிசாமி குற்றச்சாட்டு @ நெல்லை பிரச்சாரக் கூட்டம்

திருநெல்வேலியில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.

திருநெல்வேலி: "நாட்டை பற்றி தெரியாத பொம்மை முதல்வர் ஸ்டாலின். கள்ளக்கூட்டணிக்கு சொந்தக்காரர்கள் திமுகவினர். திமுகதான் பாஜகவுடன் கள்ளக்கூட்டணி வைத்துள்ளது. ஆனால் நம் மீது குற்றஞ்சாட்டுகிறார் ஸ்டாலின்" என்று திருநெல்வேயில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

திருநெல்வேலி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணிக்கு ஆதரவு கேட்டு திருநெல்வேலி வாகையடிமுனையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பழனிசாமி பேசியதாவது: "கட்சிக்கு விசுவாசமாக உழைப்பவர் ஜான்சி ராணி. அதனால் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஜனநாயக கட்சி. சாதாரண கிளை கழக செயலராக இருந்து கட்சியில் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளேன். ஆனால் ஸ்டாலின் அப்படியா வந்தார். அவர் ஒரு பொம்மை முதல்வர். உழைப்பு என்றால் அவருக்கு என்னவென்று தெரியாது.அதிமுகவில் உழைத்தால் பதவி கிடைக்கும். அதிமுக ஒரு இடத்தில்கூட வெற்றிபெறாது என்று ஸ்டாலின் கூறுகிறார்.

இந்த இடம் ராசியான இடம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பேசிய இடம். இறைவன் எங்களுக்கு அருளாசி அளிக்கிறான். அதிமுக நாட்டு மக்களுக்கு உழைக்கும் கட்சி. திமுக வீட்டுமக்களுக்கு உழைக்கும் கட்சி. திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அதிமுக ஜனநாயக முறைப்படி செயல்படும் கட்சி. அதனால்தான் ஜான்சி ராணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுகவில் வாரிசு அரசியல் இருக்கிறது. அக்கட்சியில் வாரிசுகள்தான் இப்போது அதிகளவில் போட்டி போடுகிறார்கள்.

திமுக குடும்ப ஆட்சி. அந்த கட்சி வெற்றிபெற்றால் நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது. சாதாரண தொண்டனும் அதிமுகவில் பொதுசெயலராக முடியும். திமுகவில் முடியுமா?. அதிமுக மீது வழக்கு பதிவு செய்துவிட்டால் அதிமுகவை ஒழிக்க முடியுமா?. பகல் கனவு காண்கிறார் ஸ்டாலின். திறனற்ற முதல்வராக இருக்கிறார். நாட்டை பற்றி தெரியாத பொம்மை முதல்வர். கள்ளக்கூட்டணிக்கு சொந்தக்காரர்கள் திமுகவினர். திமுகதான் கள்ளக்கூட்டணி வைத்துள்ளது. ஆனால் நம் மீது குற்றஞ்சாட்டுகிறார் ஸ்டாலின். நடிப்பில் திறமையானவர்.

அமைச்சராக இருக்கும் உதயநிதி என்ன பேசுவது என்று தெரியாமல் பேசுகிறார். சிரித்தால் பல்தான் தெரியும். பிரதமரிடம் பேசும்போது நீங்கள்தான் பல்லை காட்டியுள்ளீர்கள். யாருக்கும் நாங்கள் அடிமை இல்லை. பாஜகவுடன் பிரிந்து வந்துவிட்ட பின்னரும் அதை ஸ்டாலின் கொச்சைப்படுத்தி பேசுகிறார்.

3 ஆண்டுகாலம் நாட்டை குட்டிச்சுவராக்கிவிட்டார். எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் நடமாட்டம். வெளிநாடுகளுக்கு போதை பொருள் கடத்திய நபரோடு ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் என்ன தொடர்பு. 2026-ல் அதிமுக ஆட்சி அமையும். அப்போது இதற்கெல்லாம் பதில் சொல்லப்படும்.

தமிழக மக்களுக்கு பாதிப்பு வரும்போது அதை எதிர்க்கும் கட்சி அதிமுக. நீட் தேர்வு என்று ஏமாற்றுவேலையில் திமுக ஈடுபடுகிறது. இப்போது எவ்வளவு நாடகம் ஆடுகிறார்கள். நீட் தேர்வு ரத்து ரகசியத்தை உதயநிதி ஸ்டாலின் சொல்ல வேண்டும். நீட் தேர்வு எதிர்ப்பு கையெழுத்து படிவங்கள் குப்பை தொட்டிக்கு போய்விட்டன.

ஆளுநரை எதிர்த்து நான் ஏன் பேசவேண்டும். எதிர்க் கட்சியாக இருக்கும்போது ஆளுநரை சந்தித்து எங்கள் மீது ஊழல் புகாரை கொடுத்துவிட்டு சிரிக்க பேசினார் ஸ்டாலின். அப்போது இனித்தது. இப்போது கசக்கிறதா. கொள்கையை விற்கும் கட்சி திமுக. ஊழலுக்காக கலைக்கப்பட்ட கட்சி திமுக. 2 ஜி வழக்கு தூசி தட்டப்பட்டுள்ளது. அதில் ஈடுபட்டவர்கள் எங்கு போவார்கள் என்பது உங்களுக்கு தெரியும். அதிமுகவுக்கு துரோகம் செய்பவர்கள் சிறைக்கு செல்வார்கள்.

கடந்த 3 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை. 3.5 லட்சம் கோடி கடனை வாங்கியுள்ளது. கடன் வாங்கித்தான் மகளிர் உரிமை தொகையை கொடுக்கிறீர்கள். 27 மாதங்களுக்கு பின்னர்தான் கொடுக்கப்படுகிறது. அதிமுக சட்டப் பேரவையில் கொடுத்த அழுத்தம் காரணமாக கொடுக்கப்படுகிறது. இதுபோல் அதிமுகவின் அழுத்தம் காரணமாகவே திட்டங்களை கொண்டுவந்துள்ளனர். நாங்கள் கொண்டுவந்த திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டுகிறது.

அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி என்று மக்கள் கொண்டாடுகிறார்கள். எல்லா துறைகளிலும் அதிமுக அரசு சாதனை படைத்தது. தேசிய அளவில் விருதுகளை அதிகம் பெற்றது அதிமுக ஆட்சி. அரிசி, மளிகை பொருட்கள் விலை அதிகரித்துவிட்டது. அதை கட்டுப்படுத்த தவறிய அரசாக திமுக அரசு உள்ளது. அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு அதிக திட்டங்களை கொண்டுவந்தோம், என்று அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் பேசும்போது, “திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே கள்ளக்கூட்டணி அமைந்துள்ளது. திமுக தேர்தல் பிரச்சாரத்தில் உருவக்கேலி செய்கிறது” என்று குறிப்பிட்டார். திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக செயலர் தச்சை கணேசராஜா, புறநகர் மாவட்ட செயலர் இசக்கிசுப்பையா எம்.எல்.ஏ., ஏற்கெனவே வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சிம்லா முத்துச்சோழன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x