Published : 26 Mar 2024 12:47 PM
Last Updated : 26 Mar 2024 12:47 PM

ஈரோடு அதிமுக வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.582 கோடி: பிரமாணப் பத்திரத்தில் தகவல்

ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார்

ஈரோடு: ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் தனது பிரமாணப் பத்திரத்தில் தனக்கு ரூ.582.95 கோடியும், தன் மனைவிக்கு ரூ.69.98 கோடியும் சொத்து இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அசோக்குமார் போட்டியிடுகிறார். ஆற்றல் எனும் பெயரில் அறக்கட்டளை நடத்தி வரும் அசோக்குமார், கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். பாஜக ஓபிசி அணியின் துணைத் தலைவராக பதவி வகித்து வந்த அசோக்குமார், கடந்த நவம்பர் மாதம் அதிமுகவில் இணைந்தார்.

ஆற்றல் அறக்கட்டளை மூலம் மலிவு விலை உணவகம், மருத்துவ சேவை, பள்ளிகள் மற்றும் கோயில் கட்டுமானப் பணி போன்ற பணிகளை செய்து வரும் அசோக்குமார், தற்போதைய மொடக்குறிச்சி பாஜக எம்.எல்.ஏ. சி.சரஸ்வதியின் மருமகன் ஆவார்.

ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜ கோபால் சுன்கராவிடம், நேற்று அசோக்குமார் தாக்கல் செய்தார். இத்துடன் அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், அவரது சொத்து மதிப்பு, கடன் மற்றும் கல்வித் தகுதி உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. தன்னை சமூக சேவகர் மற்றும் தொழிலதிபர் என அசோக்குமாரும், அவரது மனைவி கருணாம்பிகா குமார் கட்டுமான வடிவமைப்பாளர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

பிரமாணப் பத்திரத்தின்படி, அதிமுக வேட்பாளர் அசோக்குமாருக்கு ரூ.526 கோடியே 53 லட்சத்து 9500 ரூபாய் அசையும் சொத்துக்கள் உள்ளன. இதில், வங்கி கணக்குகளில் ரூ.6.99 கோடி, 10.01 கிலோ நகை, கையிருப்பு ரூ.10 லட்சம் ஆகியவை அடங்கும். இத்துடன் குடும்ப சொத்து மற்றும் தனது சுய சம்பாத்திய சொத்து என மொத்தம் ரூ 56.95 கோடி அசையா சொத்துகள் உள்ளன.

இதன்படி வேட்பாளர் அசோக்குமாருக்கு மொத்தமாக ரூ.582.95 கோடி சொத்து உள்ளது. அதேநேரம், தனக்கு சொந்த வாகனம் இல்லை என்று பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள அசோக்குமார், ரூ.12 லட்சம் கடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேபோல், இவரது மனைவி கருணாம்பிகா குமாருக்கு ரூ.47.38 கோடி அசையும் சொத்துக்கள், ரூ.22.60 கோடி அசையா சொத்துக்கள் என மொத்தம் ரூ.69.98 கோடி சொத்துக்கள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 10.60 கிலோ எடையுள்ள தங்கநகை மற்றும் கையிருப்பு ரூ 5 லட்சமும் அடக்கம். இவரை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.இ.பிராகாஷ் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், தனக்கு ரூ.4.89 கோடி சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x