Published : 26 Mar 2024 09:58 AM
Last Updated : 26 Mar 2024 09:58 AM

காங்கிரஸில் கோஷ்டி பூசலால் குமரியை சேர்ந்தவர் நெல்லை வேட்பாளரானார்!

திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சியில் நிலவும் கோஷ்டி பூசலால் மக்களவை தொகுதி வேட்பாளரை அறிவிப்பதில் கடைசிவரை இழுபறி நீடித்தது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும்.

நாளை பிற்பகல் 3 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டியிருக்கும் குறைந்த காலஅவகாசமே உள்ள நிலையில், திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர் பெயரை அறிவிப்பதில் நீண்ட தாமதம் செய்யப்பட்டது. அதேநேரத்தில், திருநெல்வேலி தொகுதி அதிமுக, பாஜக வேட்பாளர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனர்.

இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நாங்குநேரியில் நேற்று இரவு நடைபெற்ற தமிழக முதல்வர் பங்கேற்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்துக்கு முன்னராவது காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படாத நிலையில் வேட்பாளரை அறிமுகம் செய்யாமல், கை சின்னத்துக்கு மட்டுமே தமிழக முதல்வர் வாக்கு சேகரிக்கும் தர்மசங்கடத்துக்கு தள்ளப்படக்கூடும் என்று திமுகவினர் முணுமுணுத்தனர்.

காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பூசலால் வேட்பாளர் அறிவிப்பில் தொடர்ந்து சில நாட்களாக நடைபெறும் இழுபறியை முடிவுக்கு கொண்டுவருவதில் தேசிய தலைமையும், மாநில தலைமையும் தர்மசங்கடத்துக்கு தள்ளப்பட்டன.

இத்தொகுதியில் காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும் நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினருமான ரூபி மனோகரன், அவரது மகன் ஆனந்தன், பால்ராஜ், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ராபர்ட் புரூஸ், முன்னாள் எம்.பிக்கள் பீட்டர் அல்போன்ஸ், ராமசுப்பு என்று பலரது பெயர்களும் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வந்தன.

சீட் பெறுவதற்கு இவர்களில் பலரும் காய்களை நகர்த்தியதுடன், உள்ளடி வேலைகளிலும் ஈடுபட்டதாக தெரிகிறது. உள்ளூர் வேட்பாளர்தான் வேண்டும் என்று சிலரும், கட்சி தலைமை யாரை நிறுத்தினாலும் சரி என்று வேறுசிலரும் போர்க்கொடி தூக்கியிருந்தனர். உள்ளூர் காங்கிரஸாரிடையே நிலவிய குடுமிப்பிடி சண்டையால், அருகிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி ராபர்ட் புரூஸை கட்சி தலைமை நேற்று மாலையில் அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவித்தது.

விளவங்கோட்டில் தாரகை கத்பர்ட்: காங்கிரஸ் கட்சியின் 6-வது வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. இதில் தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தானில் போட்டியிடும் 5 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதுதவிர இடைத்தேர்தலை சந்திக்கும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கான வேட்பாளர் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இதன்படி தமிழகத்தின் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி வேட்பாளராக வழக்கறிஞர் சி.ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் டாக்டர் தாரகை கத்பர்ட் நிறுத்தப்பட்டுள்ளார்.

ராஜஸ்தானில் கேட்டா மக்களவைத் தொகுதி வேட்பாளராக பிரகலாத் குஞ்சால் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பாஜகவில் இருந்து அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர் ஆவார். இவர் பாஜக சார்பில் போட்டியிடும் சபாநாயர் ஓம் பிர்லாவை எதிர்கொள்கிறார்.

அஜ்மீரில் ராம்சந்திர சவுத்ரியும் ராஜ்சமந்த் தொகுதியில் சுதர்ஷன் ராவத்தும் போட்டியிடுகின்றனர். பில்வாரா தொகுதியில் தாமோதர் குர்ஜார் போட்டியிடுகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x