Published : 26 Mar 2024 05:28 AM
Last Updated : 26 Mar 2024 05:28 AM

பிரச்சாரத்துடன் களைகட்டியது மக்களவை தேர்தல் திருவிழா: தமிழகத்தில் மனுதாக்கல் விறுவிறுப்பு

மக்களவை தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் களைகட்டியுள்ளது. மதுரையில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக காந்தி அருங்காட்சியகம் அருகே நேற்று ஊர்வலமாக சென்ற பாஜகவினர்.படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

சென்னை: தமிழகம் முழுவதும் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ததால் தேர்தல் அலுவலகங்கள் விழாக்கோலம் பூண்டன.

மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் கடந்த 20-ம் தேதி முதல் வேட்புனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று பங்குனி உத்திரம் நல்ல நாள் என்பதால் தமிழகம் முழுவதும் பல இடங்களில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்கள், நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதனால், திரும்பிய பக்கமெல்லாம் வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் காணப்பட்டனர். தேர்தல் அலுவலகத்துக்கு வெளியே பல்வேறு கட்சிகளின் தொண்டர்களும் தங்கள் கட்சிக் கொடிகளை அசைத்து, நடனமாடினர். இதனால், அனைத்து தொகுதிகளிலும் நேற்று தேர்தல் திருவிழா களைகட்டியது.

திமுக சார்பில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் டி.ஆர்.பாலு, வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்த், வட சென்னையில் கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். கூட்டணி கட்சிகளை சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திசிதம்பரம் சிவகங்கை தொகுதியிலும், மதிமுக வேட்பாளர் துரை வைகோ திருச்சி தொகுதியிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் மதுரை தொகுதியிலும், விசிக வேட்பாளர் ரவிக்குமார் விழுப்புரம் தொகுதியிலும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

பாஜக கூட்டணியில் எல்.முருகன் நீலகிரியிலும், பொன். ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியிலும், நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியிலும், பாரிவேந்தர் பெரம்பலூரிலும், ஏ.சி.சண்முகம் வேலூரிலும் வேட்புமனு தாக்கல் செய்தனர். கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியிலும், பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி தருமபுரி தொகுதியிலும், தங்கர் பச்சான் கடலூரிலும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

வேட்பாளர்கள் வாழ்த்து: விருதுநகரில் வேட்புமனு தாக்கலின்போது பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமாரும், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனும் நேரில் சந்தித்து பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்தனர். இதேபோல, தென் சென்னையில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனும், திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனும் வேட்புமனு தாக்கலின்போது நேரில் சந்தித்து கட்டியணைத்து வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

நீலகிரியில் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்ய ஊர்வலமாக சென்றபோது, அதிமுகவினரும் ஊர்வலமாக வந்ததால், இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பாஜகவினர் மீது போலீஸார் தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து வேட்பாளர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதேபோல, வட சென்னை தொகுதியில் அதிமுக, திமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய, தேர்தல் அதிகாரியின் அறையில் நுழைந்ததால், இரு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக, நீண்ட நேரம் காத்திருந்த பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் மற்றும் அவருடன் வந்தவர்கள் அலுவலக வளாகத்திலேயே திமுக, அதிமுககட்சிகளுக்கு எதிராகவும், போலீஸாருக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். இதுபோன்ற சம்பவங்களால் சில இடங்களில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

திருப்பூரில் கராத்தே மாஸ்டர் ஒருவர் கராத்தே பயிற்சி செய்தபடியே வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். பல தொகுதிகளில் சுயேச்சைவேட்பாளர்கள் டெபாசிட் தொகைக்காக மூட்டைகளில் சில்லறை காசுகளை எடுத்து வந்திருந்தனர். நேற்று ஒரே நாளில் நூற்றுக்கணக்கானோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் பலரும் உடனே பிரச்சாரத்தையும் தொடங்கினர்.

வேட்புமனு தாக்கல் செய்ய நாளை (மார்ச் 27) கடைசி நாள். 28-ம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறுகிறது. மனுக்களை திரும்பபெற மார்ச் 30-ம் தேதி கடைசி நாள்.அன்று மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அன்று இரவே அனைத்து வேட்பாளர்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கப்படும். அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பிரச்சாரம் சூடுபிடிக்கும். ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவும், ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x