Published : 25 Mar 2024 05:31 AM
Last Updated : 25 Mar 2024 05:31 AM

ரயில் நிலையங்களில் மானிய விலையில் பாரத் அரிசி, கோதுமை மாவு விற்பனை: ரயில்வே வாரியம் அனுமதி

சென்னை: மத்திய அரசு சார்பில், மானியவிலையில் விற்பனை செய்யப்படும் பாரத் அரிசி, கோதுமை மாவு ஆகியவற்றை ரயில் நிலையங்களில் விற்பனை செய்ய ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

மத்திய அரசு சார்பில், பாரத் அரிசி, கோதுமை மாவு, பாரத் பருப்பு போன்றவை மானிய விலையில் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பல்வேறு தரப்பினர் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், ரயில் நிலையங்களில் மானிய விலையில் பாரத் அரிசி, கோதுமை மாவு ஆகியவற்றை விற்பனை செய்ய ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை ரயில்வே வாரியத்தின் பயணிகள் வர்த்தகப் பிரிவு தலைமை இயக்குநர் நீரஜ் சர்மா கடந்த 15- ம் தேதி பிறப்பித்துள்ளார். இந்த விற்பனை திட்டத்தை மத்தியஅரசின் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் மேற்கொள்கிறது.

முதல்கட்டமாக, அரிசி, கோதுமைமாவு ஆகியவற்றை சோதனை முறையில் விற்பனை செய்ய மூன்று மாதங்களுக்கு இத்துறைக்கு அனுமதி வழங்கி உள்ளது.

இத்திட்டத்தில், ஒரு கிலோ அரிசி ரூ.29 க்கும், ஒரு கிலோ கோதுமை ரூ.27.50 க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது. பாரத் அரிசி, பாரத் ஆட்டா என்ற பெயரில் நியாயவிலையில் விற்பனைக்கு வர உள்ளது. நடமாடும் வாகனம் (மொபைல் வேன்) மூலம் இந்த விற்பனை செய்யப்பட உள்ளது. மாலை நேரத்தில் இரண்டு மணி நேரம் ரயில் நிலையங்களின் நுழைவுப் பகுதியில் இந்த விற்பனை நடைபெறும்.

ஒரு ரயில் நிலையத்துக்கு ஒருமொபைல் வேன் மட்டுமே விற்பனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் விற்பனைக்கு ஏற்ற இடங்கள் அந்தந்தகோட்ட மேலாளர் ஒப்புதலுடன் தேர்வு செய்யப்பட வேண்டும், உணவு விற்பனை தட்டுப்பாடுகளுக்கு ரயில்வே பொறுப்பேற்காது, விற்பனை செய்ய வரும் வேன்களில் மட்டுமே விளம்பர பேனருக்கு அனுமதி தரப்படும். விற்பனைக்கு மைக் செட் விளம்பர அனுமதி இல்லைபோன்ற நிபந்தனைகளும் இத்திட்டத்துக்கு விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விற்பனைக்காக எந்த கட்டணமோ, விற்பனை வேன்நிறுத்துவதற்காக வழக்கமான பார்க்கிங் கட்டணமோ ரயில்வேத்துறை வசூலிக்காது எனவும் அந்த உத்தரவில் ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இத்திட்டத்தால் பயணிகள், மற்றும் நலிவடைந்த பிரிவினர் பெரிதும் பலன் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வரவேற்பை பொறுத்து இத்திட்டத்தை மத்தியஅரசு நிரந்தரப்படுத்த திட்டமிட்டுள் ளது.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன் பெறும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் மற்றும் புறநகர் மின்சாரப்பாதை ரயில் நிலையங்களில் விற்பனைக்கு அனுமதி தரப்படவில்லை. மற்ற ரயில் நிலைங்களில் பாரத் அரிசி, கோதுமை மாவு விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது. இருப்பினும், எந்தெந்த ரயில் நிலையங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்பது தொடர்பாக இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து ஓய்வு பெற்ற மூத்த ரயில்வே தொழிற்சங்க தலைவர் மனோகரன் கூறியது: பெரிய நகரங்களில் அதிக மக்கள் வந்து செல்லும் ரயில் நிலையங்களில் இத்திட்டத்துக்கு வரவேற்பு கிடைக்கும். இத்திட்டத்தை நிரந்தரமாக்கும் பட்சத்தில், இந்த விற்பனைக்கான கட்டணத்தை ரயில்வே வாரியம் நிச்சயமாக நிர்ணயிக்கும்.

பெரும்பாலான ரயில் நிலையங்களில் ஒரு சில ரயில்கள் மட்டுமே நின்று செல்வது, மாலை நேரத்தில் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது போன்றபாதகமான அம்சங்கள் இத்திட்டத்தில் உள்ளன. இதனால் ரயில் பயணிகள் பயன்பெறுவதில் அதிக சாத்தியமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x