Published : 24 Mar 2024 08:56 PM
Last Updated : 24 Mar 2024 08:56 PM

“எனக்காக முதல்வர் எடுத்த முயற்சிகள் சாதாரணமானவை அல்ல” - அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கான இண்டியா கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசும் அமைச்சர் பொன்முடி. உடன் வேட்பாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர்.

விழுப்புரம்: என்னை மீண்டும் அமைச்சராக்க முதல்வர் எடுத்த சட்டப்பூர்வமான முயற்சிகள் சாதாரணமானவை அல்ல என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட விழுப்புரம், விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிகளின் இண்டியா கூட்டணி கட்சி செயல்வீரர்கள், ஆலோசனைக் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுகம் அமைச்சர் பொன்முடி தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளரான எம்எல்ஏ புகழேந்தி, லட்சுமணன் எம்எல்ஏ, கவுதம சிகாமணி எம்.பி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் ஜெயசந்திரன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், முன்னாள் எம்எல்ஏக்கள் புஷ்பராஜ், செந்தமிழ் செல்வன், மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அன்னியூர் சிவா மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகளுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரான விழுப்புரம் தொகுதியின் வேட்பாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசியது: என்னை அமைச்சராக்க முதல்வர் எடுத்த சட்டப்பூர்வமான முயற்சிகள் சாதாரணமானவை அல்ல. அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மற்ற அமைச்சர்களை விட நான்தமிழக ஆளுநரின் செயல்பாடுகளை அதிகமாக விமர்சித்துள்ளேன். உண்மையான நிர்வாகத்தை நடத்துபவர் முதல்வர். மாநில அரசு எதைச் சொல்கிறதோ அதை செய்பவர்தான் ஆளுநர். இதைத்தான் சட்டம் சொல்கிறது. ஆளுநர்களை வைத்து மாநில அரசுகளை கட்டுப்படுத்த நினைக்கும் மத்திய அரசை தூக்கி எறிய வேண்டும்.

இத்தேர்தலில் களம் காணும் ரவிக்குமாரை எதிர்த்து போட்டியிடுபவர்கள் டெபாசிட் இழக்கும் அளவுக்கு நாம் களப்பணியாற்ற வேண்டும். தமிழக அரசின் திட்டங்களை வாக்காளர்களுக்கு நாம் நினைவுபடுத்த வேண்டும். பெண் நிர்வாகிகள், முணுமுணுப்பு பிரச்சாரம் செய்ய வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்தவர்கள் செய்யாததை நம் முதல்வர் செய்து வருகிறார். ‘3 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர் நம் முதல்வர்’ என்பதை வாக்காளர்களுக்கு நாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பதுதான் பாசிச ஆட்சி. ஹிட்லர், முசோலினி போல வருவதற்கு மோடி திட்டமிட்டு செயல்படுகிறார். இச்சட்டம் நம்நாட்டுக்கு சாத்தியப்படுமா? அதேநேரத்தில், இந்த குடியுரிமைச் சட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை கொடுத்து இருக்க வேண்டாமா? இச்சட்டத்தை கொண்டு வந்து மதவெறியை தூண்டி விடுவதுதான் பாஜகவின் நோக்கம்.

அமலக்காக்கத் துறை உள்ளிட்ட துறைகளை வைத்துக் கொண்டு மத்திய அரசு மற்ற கட்சி தலைவர்களை மிரட்டி வருகிறது. இத்துறைகளை வைத்து தனியார் நிறுவனங்களை மிரட்டி, பாஜக ரூ. 2,500 கோடி நிதி பெற்றுள்ளது. இதையெல்லாம் நாம் வாக்காளர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x