Published : 24 Mar 2024 08:53 AM
Last Updated : 24 Mar 2024 08:53 AM

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் தஞ்சையில் போட்டி: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

தஞ்சை தொகுதியில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர் காவலூர் என்.செந்தில்குமார் நேற்று அறிமுகம் செய்துவைத்த சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன்.

தஞ்சை மக்களவைத் தொகுதியில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் போட்டியிட உள்ளதாக, அதன் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாநில உயர்நிலைக் குழு கூட்டம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர், பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரி டெல்டா விவசாயிகளின் நலனை அரசியல் கட்சிகள் ஒட்டுமொத்தமாக புறந்தள்ளிவிட்டன.

கடந்த ஆட்சிக் காலத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட காவிரி டெல்டாவை, பாதுகாக்கப்பட்ட பெட்ரோலிய ரசாயன மண்டலமாக செயல்படுத்த திமுக துணைபோகிறது.

மூடப்பட்ட ஹைட்ரோகார்பன் கிணறுகளை ஓஎன்ஜிசி நிறுவனம் திறக்கிறது. இதை எதிர்க்கும் விவசாயிகள், காவல் துறை மூலம் மிரட்டப் படுகின்றனர். மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாக ஆணையம் கொண்டு வந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் திமுக அரசு மவுனம் காத்தது.

மேகேதாட்டு அணை தொடர்பான ஆணைய தீர்மானத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர வேண்டும் என வலியுறுத்தியும் தமிழக அரசு நிராகரித்துவிட்டது.

அத்துடன், விவசாயிகளுக்கு விரோதமான நில ஒருங்கிணைப்பு சட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. இதேபோல, விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளை பிரகடனப்படுத்தி மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. இதனால், பாஜகவுக்கு வாக்களிப்பதும், விவசாய விரோத கொள்கையைக் கொண்ட திமுகவுக்கு ஆதரவாக வாக்களிப்பதும் ஒன்று என்ற மனநிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, விவசாயிகளின் உணர்வை மத்திய, மாநில அரசுகளுக்கு தெரியப்படுத்தும்விதமாக, இந்த மக்களவைத் தேர்தலில் தஞ்சை தொகுதியில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் போட்டியிட உள்ளது. இதன் வேட்பாளராக காவலூர் ஊராட்சி மன்றத் தலைவர் என்.செந்தில் குமார் போட்டியிட உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x