Published : 23 Mar 2024 10:31 AM
Last Updated : 23 Mar 2024 10:31 AM

தமிழகத்தில் பாஜக கூட்டணியின் வேட்பாளர்கள் பட்டியல்

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 19 இடங்களிலும், பாமக 10, தமாகா 3, அமமுக 2, ஓபிஎஸ், தேவநாதன், ஜான்பாண்டியன், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம் ஆகியோர் தலா ஒரு இடங்களிலும் போட்டியிடுகின்றனர். இதில் ஓபிஎஸ் தனி சின்னத்திலும், தேவநாதன், ஜான் பாண்டியன், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம் ஆகியோர் தாமரை சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். அந்த வகையில், பாஜக 23 இடங்களில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறது.

பாஜக வேட்பாளர்கள்: தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியலை நேற்று முன்தினம் பாஜக வெளியிட்டது. இதில் கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தென் சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன், நீலகிரி (தனி) எல்.முருகன், கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன், திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன், மத்திய சென்னையில் வினோஜ் பி.செல்வம், வேலூரில் ஏ.சி.சண்முகம், கிருஷ்ணகிரியில் சி.நரசிம்மன், பெரம்பலூரில் டி.ஆர்.பாரிவேந்தரும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், தமிழக பாஜகவில் மீதமுள்ள 14 தொகுதிகளுக்கான 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர் தொகுதியில் பொன்.வி.பாலகணபதி, வட சென்னையில் ஆர்.சி.பால்கனகராஜ், திருவண்ணாமலையில் ஏ.அஸ்வத்தாமன், நாமக்கலில் கே.பி.ராமலிங்கம், திருப்பூரில் ஏ.பி.முருகானந்தம், பொள்ளாச்சியில் கே.வசந்தராஜன், கரூரில் வி.வி.செந்தில்நாதன், சிதம்பரம் (தனி) பி.கார்த்தியாயினி, நாகப்பட்டினம் (தனி) எஸ்.ஜி.எம்.ரமேஷ், தஞ்சாவூரில் எம்.முருகானந்தம், சிவகங்கையில் தேவநாதன், மதுரையில் பேராசிரியர் ராம சீனிவாசன், விருதுநகரில் நடிகை ராதிகா சரத்குமார், தென்காசி (தனி) பி.ஜான் பாண்டியன் ஆகியோர் களமிறக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அந்த வகையில், தமிழகத்தில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் 23 வேட்பாளர்களின் பெயர்களையும் பாஜக அறிவித்துவிட்டது. அதேபோல், புதுச்சேரி தொகுதியில் ஏ.நமச்சிவாயம் போட்டியிடுகிறார். விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பாஜக சார்பில் வி.எஸ்.நந்தினி போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாமக வேட்பாளர்கள்: பாமக 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான் கடலூரில் போட்டியிடுகிறார். 9 தொகுதிகளுக்கு முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாமக தலைவர் அன்புமணி நேற்று காலை வெளியிட்டார்.

அதில், திண்டுக்கல் - ம.திலகபாமா (மாநில பொருளாளர்), அரக்கோணம் - வழக்கறிஞர் கே.பாலு (வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை தலைவர்), ஆரணி - அ.கணேஷ் குமார் (திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர்), கடலூர் - தங்கர் பச்சான் (திரைப்பட இயக்குநர்), மயிலாடுதுறை - ம.க.ஸ்டாலின் (தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர்), கள்ளக்குறிச்சி - இரா.தேவதாஸ் உடையார், தருமபுரி - சவுமியா அன்புமணி, சேலம் - ந.அண்ணாதுரை (சேலம் தெற்கு மாவட்ட செயலாளர்), விழுப்புரம் - முரளி சங்கர் (மாணவர் அணி மாநிலச் செயலாளர்) ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் நேற்று மாலை காஞ்சிபுரம் (தனி) தொகுதி வேட்பாளராக வெ.ஜோதி வெங்கடேசன் அறிவிக்கப்பட்டார். தருமபுரி வேட்பாளர் மாற்றம்: பாமகவின் தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம் தருமபுரி தொகுதி வேட்பாளராக நேற்று காலை அறிவிக்கப்பட்டிருந்தார். மாலையில் அவர் மாற்றப்பட்டு, அன்புமணியின் மனைவியும், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவருமான சவுமியா அன்புமணி தருமபுரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

தமாகா வேட்பாளர்கள்: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகாவுக்கு ஸ்ரீபெரும்புதூர், ஈரோடு, தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இந்நிலையில், வேட்பாளர்கள் அறிவிப்பு தொடர்பாக கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கட்சியின் ஈரோடு மாவட்டத் தலைவர் பி.விஜயகுமார், ஈரோடு தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல, மாவட்டத் தலைவர் வி.என்.வேணுகோபால் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட உள்ளார். தூத்துக்குடி தொகுதிக்கு மார்ச் 24-ம் தேதி (நாளை) வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.

ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கான வேட்பாளர்களை கட்சியின்
தலைவர் ஜி.கே.வாசன் நேற்று அறிவித்தார்
படம்: ம.பிரபு

வரும் 28-ம் தேதி முதல், ஏப். 17-ம் தேதி வரை 21 நாட்களுக்கு தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்கிறேன். எங்களுக்கு சைக்கிள் சின்னம் கிடைத்துள்ளது. மூன்றாவது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அமையும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x