Published : 21 Mar 2024 06:07 AM
Last Updated : 21 Mar 2024 06:07 AM

மத்திய மின்துறை வெளியிட்ட 2022-23 ஆண்டுக்கான தரவரிசை பட்டியலில்: தமிழ்நாடு மின்வாரியத்துக்கு 50-வது இடம்

சென்னை: மத்திய மின்துறை 2022-23-ம்நிதியாண்டுக்கான 53 மின்விநியோக நிறுவனங்களின் நிதி நிலைமை, செயல்திறன் உள்ளடக்கிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், தமிழ்நாடு மின்வாரியம் 50-வது இடத்தைப் பிடித்துள்ளது.

ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் 2-க்கும் மேற்பட்ட மின்விநியோக நிறுவனங்கள் உள்ளன. தமிழகத்தில் தமிழ்நாடு மின்வாரியத்தின் துணை நிறுவனமான மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மட்டுமே அந்தப் பணிகளை மேற்கொள்கிறது.

மத்திய மின்துறை அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள மின்விநியோக நிறுவனங்களின் செயல்திறன், நிதி நிலைமை போன்றவற்றை ஆராய்ந்து ஆண்டுதோறும் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அதன்படி, கடந்த 2022-23-ம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் தமிழக மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 50-வது இடத்தைப் பிடித்து ‘சி மைனஸ்’ என்ற கிரேடில் உள்ளது.

தமிழ்நாடு மின்வாரியத்தின் மின்சார விற்பனைக்கும், வருவாய்க்கும் உள்ள இடைவெளி ரூ.1.06 கோடியாக உள்ளது.

மேலும், மின்கட்டண வருவாயை தாமதமாக ஈட்டுவது, மின்கொள்முதலுக்கு அதிகம் செலவுசெய்வது உள்ளிட்டவை காரணங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தரவரிசைப் பட்டியலில் மகாராஷ்டிர மாநிலத்தில் தனியார் துறை மின்னுற்பத்தி நிறுவனமான அதானி எலக்ட்ரிசிட்டி நிறுவனம் முதலிடத்திலும், குஜராத் மாநிலம், சூரத்தில் உள்ள டோரண்ட் பவர் நிறுவனம் 2-வது இடத்தையும், அகமதாபாத்தில் உள்ள டோரண்ட் பவர் நிறுவனம் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், “மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு மின்வாரியம் 50-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதற்காக தெரிவிக்கப்பட்டுள்ள காரணங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும். குறிப்பாக, மின்கட்டண வருவாயை விரைவாக ஈட்டவும், மின்கொள்முதலுக்கான செலவை குறைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இத்தகைய நடவடிக்கைகள் மூலம்வரும் காலத்தில் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு மின்வாரியத்தை முதல் மூன்று இடங்களுக்குள் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படும்” என்றனர்.

இதனிடையே கடன் சுமையை குறைக்கும் நடவடிக்கையாக மின்வாரியத்தை மின் உற்பத்திக்கு தனி நிறுவனமும், மின்பகிர்மானத்துக்கு தனி நிறுவனமும், காற்றாலை மற்றும் சூரியசக்தியை உள்ளடக்கிய பசுமை மின்சாரத்துக்கு தனி நிறுவனம் என 3 நிறுவனங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x