Published : 07 Feb 2018 11:33 AM
Last Updated : 07 Feb 2018 11:33 AM

ஆவடி ஓசிஎப் தொழிற்சாலையை மூடுவதா?- வாசன் கண்டனம்

ஆவடி ஓசிஎப் தொழிற்சாலையை வருகின்ற ஏப்ரல் மாதத்தில் மூடுவது தொடர்பாக மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு மிகவும் கண்டிக்கத்தக்கது என்று தமாகா தலைவர் வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் 1961-ம் ஆண்டில் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியின் போது சென்னை - ஆவடியில் ஓசிஎப் எனப்படும் படைத்துறை உடைத் தொழிற்சாலை அப்போதைய மத்திய அரசால் தொடங்கப்பட்டது. நம் நாட்டின் ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு தேவையான சீருடைகள், பாராசூட், கோட், மேற்கூரை (டெண்ட்), ஷூ போன்றவைகள் இத்தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் சீருடைகள் உயர் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படுவதால் உலகத் தரம் வாய்ந்தது என்பதை மத்திய அரசு முக்கிய கவனத்தில் கொள்ள வேண்டும்.

குறிப்பாக சமீபத்தில் ஐக்கிய நாட்டுப் போர்ப் படையின் 13 ஆயிரம் வீரர்களுக்கு மொத்தமாக 52 ஆயிரம் சீருடைகள் தயாரித்து கொடுத்துள்ளனர். மேலும் இத்தொழிற்சாலையின் மூலம் ராணுவ வீரர்களுக்கு புல்லட் புரூப், எளிதில் தீப்பிடிக்காத உடைகள் வடிவமைக்கும் பணிகளில் ஈடுபடத் தொழிலாளர்கள் தயாராக உள்ளனர். இப்படி இத்தொழிற்சாலையின் மூலம் ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு தேவையானவற்றைத் தயாரிப்பதற்காக 2,121 தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். மேலும் இங்கு சுமார் 200 ஒப்பந்த தொழிலாளர்களும், சுமார் 150 பயிற்சி பழகுநரும் பணிபுரிந்து வருகிறார்கள்.

இப்பேற்பட்ட சூழலில் மத்திய அரசு ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு சீருடை வழங்குவதற்கு பதிலாக பணமாக - சீருடைப்படி வழங்க முடிவெடுத்திருப்பதோடு, ராணுவ வீரர்கள் தங்களுக்கான உடைகளை தனியாரிடம் தைத்துக்கொள்ளலாம் என கூறியிருப்பது முற்றிலும் ஏற்புடையதல்ல.

முக்கியமாக ஆவடி ஓசிஎப் தொழிற்சாலையில் சுமார் 2,500 பேர் பணிபுரிந்து தரமான உடைகளை தயாரித்து வருகின்ற வேலையில், தனியாருக்கு ஆதாயம் தேடி தருவதற்காக, அரசின் தொழிற்சாலையை வருகின்ற ஏப்ரல் மாதத்தில் மூடுவது தொடர்பாக மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு மிகவும் கண்டிக்கத்தக்கது.

காரணம் இத்தொழிற்சாலையை மூடினால் இங்கு பணிபுரிகின்ற நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என அனைவரும் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டு, அவர்களும், அவர்களது குடும்பமும் பெரும் சிரமத்திற்கு உட்படுவார்கள். அது மட்டுமல்ல ராணுவ வீரர்களுக்கு என்று அரசின் கட்டுப்பாட்டில் இயக்கப்படுகின்ற தொழிற்சாலையின் மூலம் தயாரிக்கப்படும் உடைகளை தனியாரிடம் பெற்றுக்கொள்ளலாம் என்றால் அதன் தரமும், உறுதியற்ற தன்மையும், பாதுகாப்பும் மிகப் பெரிய கேள்விக்குறியே.

எனவே மத்திய பாஜக அரசு - ஆவடி ஓசிஎப் தொழிற்சாலையை மூடப்போவதாக எடுத்திருக்கும் முடிவை மறு பரிசீலனை செய்து - தொழிற்சாலையை தொடர்ந்து இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஆவடி ஓசிஎப் தொழிற்சாலை தொடர்ந்து இயக்கப்படுவதற்கு துணை நிற்க வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x