Published : 20 Mar 2024 04:06 AM
Last Updated : 20 Mar 2024 04:06 AM
ஆம்பூர்: வேலூர் மக்களவைத் தொகுதிக் குட்பட்ட ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் பேரணாம்பட்டு பகுதிகளில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் மாநிலத் தலைவரும், பிரபல நடிகருமான மன்சூர் அலிகான் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து அவர் வாக்கு சேகரித்தார்.
பின்னர் அவர், செய்தியா ளர்களிடம் கூறும்போது, ‘‘மக்களவைத் தேர்தலில் நான் வெற்றி பெற்று புது டெல்லிக்கு சென்றால் வெட்டு ஒன்னு, துண்டு இரண்டு என மக்களுக்காக பேசுவேன். என்னுடைய இயல்பான நடைமுறையே அப்படி தான். தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன் சட்டப் பேரவையில் அனைவரையும் சிரிக்க வைக்கின்ற ஒரு கதாநாயகன். அதுபோல, அவர் தொகுதி மக்களையும் சிரிக்க வைக்க வேண்டும், மக்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அவரது மகன் கதிர்ஆனந்த் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் வாக்குறுதியின் போது ஆம்பூர் ரெட்டிதோப்பு மேம்பாலம் கட்டித் தருவதாக கூறினார். ஆனால், 5 ஆண்டுகள் கடந்தும் ரெட்டி தோப்பு மேம்பாலம் கட்டவில்லை. மேம்பாலம் கட்டுவதெல்லாம் சாதாரண விஷயம். 40 சதவீதம் கமிஷன் வருவதால் இது போன்ற பணிகளை வேலூர் எம்.பி., கதிர்ஆனந்த் செய்திருக்கலாம். ஆனால், ஏனோ அவர் செய்யவில்லை. மேம்பாலம் கட்டத்தான் நான் வந்துள்ளேன். மார்ச் 30-ம் தேதிக்கு மேல் வாளை சுழட்டுவேன். வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூரில் குப்பைக் கழிவு கொட்ட கூட இடம் இல்லை என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
குப்பை கொட்ட இடம் இல்லையென்றால், சட்டப்பேரவை உறுப்பினர், மக்களவை உறுப்பினர், கவுன்சிலர் வீட்டு முன்பு கொட்ட வேண்டும். பிரதமர் மோடி தொடர்ந்து மனித நேயத்துக்கு எதிராக பேசி வருகிறார். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் நாட்டில் சங்பரிவாருக்கு ஆதரவாக செயல்படுகிறாரோ என்னவோ தெரியவில்லை. இதுபோன்று கொள்கை மனப்பான்மையோடு நாட்டின் பிரதமர் செயல்படுவது கண்டிக்கத்தக்கது’’ என்றார். பின்னர், வாணியம்பாடி நியூ டெல்லி பகுதிக்கு சென்ற நடிகர் மன்சூர்அலிகான் அங்குள்ள மக்களை சந்தித்து வரும் மக்களவைத் தேர்தலில் தனக்கு ஆதரவு தருமாறு கேட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT