Published : 19 Mar 2024 11:33 AM
Last Updated : 19 Mar 2024 11:33 AM

அதிமுகவுக்கு ‘தைலாபுர’ ஷாக்: பாஜக - பாமக கூட்டணியால் யாருக்கு சாதகம்?

சென்னை: மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பதற்காக பாஜக - பாமக இடையிலான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இதில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுகவுடன் பாமக கூட்டணி சேரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று இரவு பாஜக - பாமக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி ஷாக் கொடுத்தது.

தமிழகத்தின் வடமாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கி வைத்துள்ள பாமகவை தங்கள் கூட்டணியில் சேர்க்க அதிமுகவும், பாஜகவும் தீவிர முயற்சி மேற்கொண்டன. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பாமகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கடந்த முறை போலவே 7 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதற்கிடையே, அன்புமணியிடம் பேச்சுவார்த்தை நடத்திய பாஜக மேலிட பொறுப்பாளர்களான வி.கே.சிங், கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் 10 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பதாகவும், மீண்டும் ஆட்சி அமைந்த பிறகு மத்திய அமைச்சர் பதவி பற்றி பேசி முடிவு செய்வதாகவும் உறுதி அளித்தனர்.

இரு தரப்பிலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட நிலையில், பாமக எந்த பக்கம் நகரும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இப்போது பாஜக - பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

யார் யாருக்கு சாதகம், பாதகம்?: யாருக்கு பாதகம் என்று பார்த்தால் அதிமுக பக்கமே அனைத்து கைகளும் திரும்புகின்றன. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு கொடுத்ததன் காரணமாக தென் மாவட்டங்களில் பலத்த அடியை வாங்கியது இபிஎஸ் தலைமையிலான அதிமுக. வன்னியர் இடஒதுக்கீடு காரணமாக தென் மாவட்டங்களில் வெற்றி கிடைக்காது என்பதை முன்கூட்டி அறிந்தே பாமகவை கூட்டணி பக்கம் இழுத்திருந்தார் இபிஎஸ். இதற்கு கை மேல் பலன் கிடைத்தது. கொங்கு பெல்ட் தாண்டி வடமாவட்டங்களில் கணிசமாக வெற்றியை பெற்று கவுரவமான தோல்வியாக சட்டப்பேரவையில் தோல்வி கண்டிருந்தது அதிமுக..

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவும் அதிமுக கூட்டணியில் இருந்தது. பாஜக மாநில தலைமை மேல் இருந்த கசப்பின் காரணமாக அதிமுக பாஜகவுக்கு பிரியாவிடை கொடுக்க இக்கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. பாஜகவை தள்ளிவைத்த இபிஎஸ், பாமகவை மட்டும் தன் பக்கம் வைக்கவே முயற்சித்தார். மக்களவை தேர்தல் கணக்குகளே பாமகவை தன் பக்கம் வைத்துக்கொள்ள இபிஎஸ் ஆசைப்பட இன்னொரு காரணம்.

வட மாவட்டங்களில் பாமகவுக்கு நிகராக அதிமுகவுக்கும் கணிசமான செல்வாக்கு உள்ளது. பாமக தங்கள் பக்கம் இருந்தால் கொங்கு பெல்ட்டை ஒட்டிய வடமேற்கு மாவட்டங்களில் வெற்றி கைகூடும் என்று எண்ணத்தில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக பாமகவுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. அதிமுக. 7+1 என்ற கணக்கில் ஒரு மாநிலங்களவை சீட் உட்பட சலுகைகளை அளிப்பதாகவும் இந்த பேச்சுவார்த்தை குறித்த தகவல்கள் சொல்லப்பட்டன. ஆனால், இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்து பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கியம் ஆகியுள்ளது பாமக.

தற்போது அதிமுக கைவசம் இருப்பது தேமுதிக மட்டுமே. அதுவும் ஒரு மாநிலங்களவை சீட் வேண்டும் என்று பிரேமலதா கண்டிஷனாக கூறிவருவதால் இன்னும் அது உறுதியாகாமல் நீட்டித்து வருகிறது. வாக்கு சதவீதங்கள், வெற்றி என்பதை தாண்டி பலமான கூட்டணி என்ற நோக்கிலேயே அதிமுகவுக்கு பாதகமாக அமைந்துள்ளது பாஜக - பாமக கூட்டணி.

இந்தக் கூட்டணியால் யாருக்கு லாபம் என்று பார்த்தால் அது முதலில் பாமகவுக்கு தான். தொடர்ச்சியான தோல்விகளால் மாம்பழ சின்னத்தை தக்கவைக்க வேண்டிய கட்டாயத்தில் பாமக உள்ளது. தற்போது பாஜக கூட்டணியில் பத்து தொகுதியில் போட்டியிடுவதால் குறைந்தது ஒரு சதவீதம் வாக்கு வாங்கினால் சின்னத்தை தக்கவைக்க முடியும் என்ற கணக்குப்படி பாஜக கூட்டணி பக்கம் பாமக சாய்ந்திருக்கலாம். ஏனென்றால், அதிமுக தரப்பு ஏழு தொகுதிகள் வரை மட்டுமே பாமகவுக்கு கொடுக்க முன்வந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இந்த தேர்தல் வெற்றியை தாண்டி தமிழகத்தில் பாஜக அதிக வாக்கு சதவீதம் பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. கடந்த காலங்களில் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை என்பதால், அதனால் ஏற்பட்ட விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தேர்தலில் அதிக வாக்கு சதவீதம் பெறும் முனைப்பில் அக்கட்சி உள்ளது. அதற்கு பாமக கூட்டணி நிச்சயம் உதவும் என்பது பாஜகவின் கணக்கு. வட மாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கி வைத்துள்ளது பாமக. வட மாவட்டங்களில் பாமகவை வைத்து தங்களின் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க பாஜக முற்படலாம்.

அதிமுகவும், பாஜகவும் தனி கூட்டணி அமைத்து போட்டியிடுவதால் திமுக கூட்டணிக்கு கூடுதல் லாபம் ஏற்பட்டிருக்கிறது. அதிமுகவுடன் பாமக சேர்ந்திருந்தால் வடமாவட்டங்களில் திமுகவுக்கு சவாலான போட்டி உண்டாகி இருக்கும். தற்போது உண்டாகியுள்ள மும்முனை போட்டியில் அதிமுக தனித்தே களம் காண்கிற சூழல் ஏற்பட்டுள்ளது. இது வடமாவட்டங்களில் வாக்கு பிரிவுக்கு வழிவகுக்கும். கூட்டணி சகிதமாக பத்து வருடங்களாக பலமாக உள்ளது திமுக கூட்டணி. தொகுதி பங்கீடு முதற்கொண்டு அந்தக் கூட்டணியில் பெரிய சலசலப்புகள் இல்லை. இதனால் தங்கள் கூட்டணிக்கு உரிய வாக்குகள் கிடைத்தாலே வெற்றி எளிதாகிவிடும் என்பதால் பாமக உடன் பாஜக கூட்டணி அமைத்ததில் திமுக கூட்டணி மகிழ்ச்சி அடைந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x