Published : 19 Mar 2024 10:27 AM
Last Updated : 19 Mar 2024 10:27 AM

வடக்கு, மேற்கில் அதிக தொகுதிகளில் திமுக போட்டி: கூட்டணி கட்சிகளுக்கு தெற்கு, மத்திய தொகுதிகள்!

கடந்த முறை மக்களவைத் தேர்தலில், திமுக 20 தொகுதிகளில் போட்டியிட்டது. கூட்டணியில் இருந்த மதிமுக, விசிக, ஐஜேகே, கொமதேக கட்சிகளின் உறுப்பினர்கள் 4 பேர் திமுக சின்னத்தில் நின்றனர்.

இந்த தேர்தலில், பாஜக கூட்டணிக்கு ஐஜேகே சென்றுவிட்டது. இதையடுத்து, திமுக 21 தொகுதிகளிலும், மீதமுள்ள 19 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளும் போட்டியிடுகின்றன. முன்னதாக, கடந்த 6 மாதங்களுக்கும் மேலாகவே, மக்களவை தேர்தலுக்கான அடிப்படை பணிகளை தொடங்கிவிட்டது திமுக.

இந்த தேர்தலை பொருத்தவரை, அதிமுக, பாஜக இரு கட்சிகளும் தனித்து போட்டியிடுவதை கருத்தில் கொண்டு, கூட்டணி கட்சிகளிடம் சில தொகுதிகளை திமுக கேட்டு பெற்றுள்ளது. குறிப்பாக, திமுக வடக்கு மற்றும் மேற்கு தொகுதிகளில் அதிக கவனம் செலுத்துவதை இந்த தேர்தலில் பார்க்க முடியும்.

இதன் மூலம், புதுச்சேரியுடன் சேர்த்து 15 தொகுதிகள் அடங்கிய வடக்கு பகுதியில், தென்சென்னை, வடசென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், வேலூர், ஆரணி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

அடுத்ததாக, மேற்கு மண்டலத்தில் உள்ள 9 தொகுதிகளில் திருப்பூர், கிருஷ்ணகிரி, நாமக்கல் தவிர, மீதமுள்ள தர்மபுரி, நீலகிரி, பொள்ளாச்சி, ஈரோடு, கோவை, சேலம் ஆகிய 6 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இதற்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் இருந்து கோவை, மதிமுகவிடம் இருந்து ஈரோடுஆகிய தொகுதிகளை கேட்டு வாங்கியுள்ளது.

தென்மாவட்டங்களை பொருத்தவரை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், கன்னியாகுமரி என 7 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்துள்ள திமுக தென்காசி, தேனி, தூத்துக்குடி என 3 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. இதில், தேனி தொகுதிக்காக நெல்லையை காங்கிரஸுக்கும், மேற்கு மண்டலத்தின் கோவை தொகுதிக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திண்டுக்கல்லையும் திமுக விட்டுக் கொடுத்துள்ளது.

மத்திய தமிழகத்தில் குறிப்பாக டெல்டா பகுதியில், பெரம்பலூர், தஞ்சை தொகுதிகளில் மட்டுமே திமுக போட்டியிடுகிறது. மீதமுள்ள திருச்சி (மதிமுக), நாகை (இந்திய கம்யூனிஸ்ட்), கடலூர், மயிலாடுதுறை, கரூர் (காங்கிரஸ்) ஆகிய தொகுதிகள் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x