Published : 19 Mar 2024 09:46 AM
Last Updated : 19 Mar 2024 09:46 AM

மார்ச் 22-ல் ஸ்டாலின், 24-ல் பழனிசாமி: திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்கும் தலைவர்கள்

மக்களவை தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்கும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 22-ம் தேதியும், அதிமுக பொதுச்செயலாளர் ஸ்டாலின் மார்ச் 24-ம் தேதியும் திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்குகின்றனர். மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில், திமுக 21 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் 19 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

தொகுதி பங்கீடு முடிந்த நிலையில் இன்று அல்லது நாளை வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிட உள்ளது. வேட்பு மனுத் தாக்கல் நாளை (மார்ச் 20) தொடங்கும் நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு மற்றும் பிரச்சார நிறைவு நாட்களுக்கு இடையே 18 நாட்களே உள்ளன. பிரச்சாரத்துக்கு மிகக் குறைவான நாட்களே இருக்கும் நிலையில், முன்கூட்டியே பிரச்சாரத்தை தொடங்க திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

அந்த வகையில். திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வரும் மார்ச் 22-ம் தேதி திருச்சியில் தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார். திருச்சி சிறுகனூரில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். தொடர்ந்து மார்ச் 23-ம் தேதி சொந்த ஊரான திருவாரூரில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

அதன்பின் 39 தொகுதிகளுக்கும் செல்ல திட்டமிட்டுள்ள முதல்வர், 15 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, இரண்டு, மூன்று தொகுதிகளுக்கு பொதுவான 15 இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களிலும் அவர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்வர் மு.க.ஸ்டாலினைப்போல், அதிமுக பொதுச் செயலாளரும் திருச்சியில் தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார். அவர் மார்ச் 24 முதல் 31-ம் தேதி வரை முதல் கட்ட பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதன்படி, 24-ம் தேதி மாலை 4 மணிக்கு திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

26-ம் தேதி மாலை 4 மணிக்கு தூத்துக்குடியிலும், இரவு 7 மணிக்கு திருநெல்வேலியிலும், 27-ம் தேதி மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி தொகுதி நாகர்கோவிலிலும், இரவு 7 மணிக்கு தென்காசி தொகுதி சங்கரன்கோவிலிலும், 28-ம் தேதி மாலை 4 மணிக்கு விருதுநகர் தொகுதி சிவகாசியிலும், இரவு 7 மணிக்கு ராமநாதபுரத்திலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

அதன்பின், 29-ம் தேதி மாலை 4 மணிக்கு காஞ்சிபுரம் தொகுதி மதுராந்தகத்திலும், இரவு 7 மணிக்கு பெரும்புதூர் தொகுதி பல்லாவரத்திலும், 30-ம் தேதி மாலை 4 மணிக்கு புதுச்சேரியிலும், மாலை 6 மணிக்கு கடலூரிலும், 31-ம் தேதி மாலை 3.30 மணிக்கு சிதம்பரத்திலும், மாலை 5.30 மணிக்கு மயிலாடுதுறையிலும், இரவு 7.30 மணிக்கு நாகப்பட்டினம் தொகுதி திருவாரூரிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x