Published : 16 Mar 2024 06:10 AM
Last Updated : 16 Mar 2024 06:10 AM

சென்னை அடையாறு ஆற்றை சீரமைக்க ரூ.4,778 கோடி நிதி: முதல்வர் ஸ்டாலின் நிர்வாக ஒப்புதல் வழங்கி உத்தரவு

சென்னை: அரசு, தனியார் பங்களிப்பில் சென்னை அடையாறு ஆற்றை சீரமைக்கும் திட்டத்துக்கு ரூ.4,778.26 கோடி நிதி ஒதுக்க நிர்வாக அனுமதி வழங்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை பெருநகருக்கு உட்பட்ட கூவம், அடையாறு, கொசஸ்தலை ஆறு, பக்கிங்ஹாம் கால்வாயுடன் இன்னும் பிற கிளை கால்வாய்கள், முகத்துவாரங்கள், கழிமுகங்களை சீரமைக்கும் பணிகளை சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம்தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், ஒருங்கிணைந்த கூவம் நதி சுற்றுச்சூழல் சீரமைப்பு பணிகளை பருத்திப்பட்டு அணையில் இருந்து முகத்துவாரம் வரை 32 கி.மீ. தூரம் மேற்கொள்ள ரூ.735.08 கோடிக்கு தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. பணி முன்னேற்றம் அடிப்படையில், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு இதுவரை ரூ.545.22 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகரில் உள்ள நீர்வழி தடங்களை முழுமையாக சீரமைக்க, பக்கிங்ஹாம் கால்வாய், அதன் பிரதான கிளை கால்வாய்கள், கூவம் மற்றும் அடையாறு ஆறுகளின்கிளை கால்வாய்கள் சீரமைப்பு திட்டபணிகளுக்காக தமிழக அரசு ரூ.1,281.88 கோடி நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது.

இதுதவிர, அடையாறு முகத்துவார சுற்றுச்சூழல் சீரமைப்பு திட்டம் (300 ஏக்கர்) இரண்டாம் கட்ட பணிகளை அடையாறு உப்பங்கழி, முகத்துவாரம், சிறு தீவுகள், மணல் திட்டுகள்மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ள ரூ.24.93 கோடிக்குஅரசு அனுமதி வழங்கியது. இதன்கீழ், சீமை கருவேல மரங்கள், முட்புதர்கள் முற்றிலும் அகற்றப்பட்டு, கரைகள் திடப்படுத்தப்பட்டு, நீர்பரப்பு பகுதி அதிகரிக்கப்பட்டுள்ளது.

அடையாறு நதி சுற்றுச்சூழல் சீரமைப்பு பணிகளுக்கு தமிழக அரசு ரூ.555.46 கோடி நிர்வாக அனுமதி வழங்கியது. பல்வேறு நிலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புபணிகளை இந்த மாதம் முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. பணி முன்னேற்றம் அடிப்படையில், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு இதுவரை ரூ.372.29 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

‘சிங்கார சென்னை’ திட்டத்தின் ஒருபகுதியாக, அடையாறு, கூவம் உள்ளிட்ட நீர்வழிகளை சுத்தப்படுத்தி, மறுசீரமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக ரூ.1,500 கோடியில் கண்கவர் பொழுதுபோக்கு அம்சங்களுடன் அடையாறு ஆற்றங்கரையை அலங்கரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்’ என்று கடந்த2023-24 பட்ஜெட்டில், அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சென்னை நதிகள்சீரமைப்பு அறக்கட்டளை மூலம் வரைவு சாத்தியக்கூறு திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை மேற்கொள்ள தமிழ்நாடு நீர் முதலீடு நிறுவனத்துக்கு உத்தரவு வழங்கப்பட்டது. தவிர, இந்த அறிக்கையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட மாநில அளவிலான தொழில்நுட்ப வல்லுநர் குழுவின் விரிவான ஆய்வுக்கு பிறகு, பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள், திருத்தங்கள் அடங்கிய இறுதி அறிக்கையை தமிழ்நாடு நீர் முதலீடு நிறுவனம் சமர்ப்பித்தது.

இத்திட்டத்தை பொதுத்துறை மற்றும் தனியார் பங்கேற்பில் செயல்படுத்தலாம் என்று அந்த அறிக்கையில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அடையாறு நதியின் சீரமைப்பு பணிகளை பல்வேறு பங்களிப்பாளர்களுடன் இணைந்து சிறப்பாக செயல்படுத்துவதை உறுதிசெய்ய சிறப்பு நோக்கு நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்றும் அதில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து, அடையாறு நதியை சீரமைக்கும் திட்டத்தை அரசு - தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த கொள்கை அளவிலான அனுமதியை தமிழக அரசு கடந்த ஆண்டு வழங்கியது. அத்துடன், சென்னை நதிகள் மறுசீரமைப்பு நிறுவனத்தை உருவாக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் தொடங்கி தாம்பரம், திருநீர்மலை, மணப்பாக்கம், ஆலந்தூர், சைதாப்பேட்டை ஆகிய பகுதிகள் வழியாக பாய்ந்து வங்கக்கடலில் கலக்கும் அடையாறு நதியை மீட்டெடுத்து அழகுற சீரமைக்கும் திட்டத்தின்கீழ், அடையாறு ஆற்றின் 2 கரைகளிலும்70 கி.மீ. தூரத்துக்கு கழிவுநீர் குழாய்கள் அமைத்து, கழிவுநீரை தடுத்து சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படும்.

இதற்காக, பசுமை வழி (கிரீன்வேஸ்) சாலை, கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, நெசப்பாக்கம், ராமாபுரம், மணப்பாக்கம், மீனம்பாக்கம், தரப்பாக்கம், அனகாபுத்தூர், தாம்பரம், வரதராஜபுரம் அருகே 14 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

இவ்வாறு சுத்திகரிக்கப்படும் நீர், நிர்ணயிக்கப்பட்ட தரத்துடன் இருப்பது உறுதி செய்யப்படுகிறது. ஆற்றின் கரையில் கோட்டூர்புரம், ராமாபுரம், சைதாப்பேட்டை, பசுமை வழி (கிரீன்வேஸ்) சாலை ஆகிய பகுதிகளில் 4 பூங்காக்கள், நடைபாதை போன்றவை அமைக்கப்படுன்றன.

தற்போது இத்திட்டத்துக்காக முதல்வர் ஸ்டாலின், ரூ.4,778.26 கோடிக்கான நிர்வாக மற்றும் நிதி ஒப்புதலை வழங்கி உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x