Published : 16 Mar 2024 05:56 AM
Last Updated : 16 Mar 2024 05:56 AM

இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்கள், படகுகளை விடுவிக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள், அவர்களின் படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து மத்திய அமைச்சருக்கு முதல்வர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்திய மீனவர்கள், இலங்கை அதிகாரிகளால் அடிக்கடி கைது செய்யப்படுவது குறித்து ஏற்கெனவே பலமுறை கடிதம் எழுதியுள்ளேன்.

கடந்த வாரம் எழுதிய கடிதத்தில், இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டிருந்த 22 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க கோரியிருந்தேன். இந்நிலையில், மார்ச் 15-ம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் உட்பட 15 மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகள் சிறை பிடிக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற கைது சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால் மீனவர்களின் வாழ்வாதாரம் சீர்குலைவதுடன், மாநிலத்தில் கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவ சமூகத்தினரிடையே பெரும் கொந்தளிப்பும், விரக்தியும் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைக்கு தூதரக நடவடிக்கையின் மூலம் தீர்வு காண வேண்டியது மிக அவசியம்.

எனவே. இந்தியா - இலங்கை இடையிலான கூட்டு நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, அதன்மூலம் இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவிக்க இலங்கை அதிகாரிகளை வலியுறுத்த வேண்டும்.

தற்போது இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

அன்புமணி வலியுறுத்தல்: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், `தமிழக மீனவர்களை கைது செய்வது, அவர்களது படகுகளை பறிமுதல் செய்து ஏலத்தில் விடுவது என தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிப்பது தான் இலங்கை அரசின் நோக்கமாக இருந்து வருகிறது.

இந்த உண்மையை தெரிந்திருந்தும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது நியாயமல்ல. எனவே இனியும் தாமதிக்காமல் இந்தியா - இலங்கை அரசுகள் இணைந்து அமைத்துள்ள கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தை கூட்டி மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்' என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x