Last Updated : 14 Mar, 2024 06:14 PM

 

Published : 14 Mar 2024 06:14 PM
Last Updated : 14 Mar 2024 06:14 PM

‘புதுச்சேரியில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு நிரந்தமாக தேவை’ - ஆளுநரிடம் அதிமுக மனு

புதுச்சேரி: மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினை நிரந்தரமாக புதுச்சேரியில் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆளுநர் தமிழிசையிடம் அதிமுக மனு அளித்துள்ளனர்.

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தலைமையில் அக்கட்சியினர் ராஜ்நிவாஸில், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை இன்று நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவின் விவரம்: 'புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட உயர்ரக போதைப் பொருட்கள் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இது போன்ற போதைப் பொருட்கள் குறிப்பாக பப், ரெஸ்டோ பார்கள், சுற்றுலா பயணிகள் கூடும் இடங்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்குதடையின்றி போதைப் பொருள் விற்பனையால் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களது நிகழ்கால வாழ்க்கையை தொலைத்துவிட்டு பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலம் முழுவதும் போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் நபர்களுக்கு குறைந்த காலத்திலேயே அதிகப்படியான பணத்தை பெறுவதால் அவர்கள் காவல்துறை, அரசியல் உள்ளிட்ட அனைத்துத் தரப்பிலும் தங்களது செல்வாக்கை குறுக்கு வழியில் பெறும் பணத்தின் மூலம் பயன்படுத்துகின்றனர்.

புதுச்சேரி காவல் துறையால் ஒருசிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், புதுச்சேரி மாநிலம் என்பது போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை கேந்திரமாக மாறி உள்ளது. எங்கிருந்து இது போன்ற போதைப் பொருட்கள் வருகின்றது என காவல் துறை விசாரணை செய்வதில்லை. போதைப் பொருள் விற்பனையாளர்கள் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் இணைந்து விற்பனை செய்கின்றனர்.

தெருவெல்லாம் கஞ்சா பொட்டலங்கள் தடையின்றி விற்பனை செய்யப்படுகின்றது. கஞ்சா விற்பனையை தடுக்கக் கூட அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதுச்சேரியில் சமூக, சமுதாய சீரழிவு மற்றும் போதைப் பொருள் தடுப்பு இவற்றில் அரசு உரிய கவனம் செலுத்தி தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே நிலை நீடித்தால் இன்னும் ஒருசில ஆண்டுகளில் புதுச்சேரி மாநிலம் அனைத்து விஷயங்களிலும் மக்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் மாநிலமாக மாறும்.

கடந்த வாரம் போதைப்பொருள் உபயோகிக்கும் நபர்களால் அட்டவணை இனத்தை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது நெஞ்சை பதறவைக்கும் செயலாகும். இந்திய அளவில் புதுச்சேரி மாநிலத்துக்கு மிகப் பெரிய தலைகுனிவை இச்செயல் ஏற்படுத்தியது. இந்த நிகழ்வுக்கு பிறகும் ஆளும் அரசு போதைப் பொருட்கள் தடுப்பு விஷயத்தில் சரியான நடவடிக்கை எடுக்க தாங்கள் அரசுக்கு துணை நிலை ஆளுநர் என்ற அடிப்படையில் பல்வேறு உத்தரவுகளை தொடர்ந்து பிறப்பிக்க வேண்டும்.

தங்களது உத்தரவுகளை அமுல்படுத்தாமலும், அலட்சியத்துடனும் செயல்படும் எந்த ஒரு அதிகாரியாக இருந்தாலும் அவர்கள் மீது தங்களுக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி கடுமையான நடவடிக்கையை உடனடியாக தாங்கள் எடுக்க வேண்டும். மத்திய போதைப் பொருள் தடுப்பு காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த திமுகவின் முன்னாள் பொறுப்பாளர் ஜாபர் சாதிக் என்பவருடன் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு முக்கிய அரசியல்வாதிகளுக்கு மிக நெருக்கமான தொடர்பு இருப்பதாக புகைப்படங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறன.

இது சம்பந்தமாக தாங்களும் இவர்கள் மீது உரிய விசாரணை நடத்தப்படும் என பகிரங்கமாக குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால், இன்றுவரை அவ்வாறு விசாரணை நடத்தப்படுகிறதா என தெரியவில்லை. புதுச்சேரி காவல்துறை போதை தடுப்பு விற்பனை மீது உரிய கவனம் செலுத்தவில்லை என்றால் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினை நிரந்தரமாக புதுச்சேரியில் கொண்டு வர வேண்டும்' என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x