Published : 13 Feb 2018 10:32 AM
Last Updated : 13 Feb 2018 10:32 AM

பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கும் சேவை நிறுத்தம்

அரசு இ-சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை அச்சிட்டு வழங்கும் சேவையை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் நிறுத்தியுள்ளது.

தமிழகத்தில் 7 கோடியே 27 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இவர்களில் சுமார் 6 கோடி பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. ஆதார் நிறுவனம் வழங்கும் ஆதார் அட்டை நீளமாக இருப்பதால், அதை கையாள்வது பொதுமக்களுக்கு சிரமமாக இருந்தது.

இந்நிலையில் ஏடிஎம் அட்டை வடிவில் ஆதார் அட்டையை வழங்க, ஆதார் பதிவு செய்து, ஆதார் எண் வழங்கி வரும் யுஐடிஏஐ நிறுவனம் முடிவு செய்தது. தமிழகத்தில் அதற்கான அங்கீகாரத்தை அரசு கேபிள் நிறுவனத்துக்கு வழங்கி இருந்தது. ஏடிஎம் அட்டை வடிவில் கிடைத்த ஆதார் அட்டை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதுவரை 39 லட்சத்துக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக இ-சேவை மையங்களில் ஆதார் அட்டை அச்சிட முடியாத நிலை இருந்து வந்தது. இந்நிலையில் அந்த சேவையை அரசு கேபிள் நிறுவனம் நிறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அரசு கேபிள் நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

அரசு இ-சேவை மையங்களில் அசல் நிரந்தர ஆதார் அட்டைக்கு மாற்றாக பிளாஸ்டிக் ஆதார் அட்டை, ரூ.30 கட்டணத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யூஐடிஏஐ) பிளாஸ்டிக் ஆதார் அட்டை அச்சிட்டு வழங்குவதை தடை செய்துள்ளது.

எனவே அரசு கேபிள் நிறுவனத்தின் அரசு இ-சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கும் சேவை நிறுத்தப்படுகிறது. மேலும், இம்மையங்களில் பொதுமக்கள் ஆதார் அட்டையின் நகலை ஏ4 தாளில் ரூ.12-க்கு அச்சிட்டு வழங்கி வருகிறது. இச்சேவை தொடரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x