Published : 08 Feb 2018 07:18 AM
Last Updated : 08 Feb 2018 07:18 AM

இந்த ஆண்டு பொறியியல் தேர்வில் கணிதம், இயற்பியல் பாடங்களில் அதிக மாணவர்கள் தோல்வி ஏன்?: காரணங்களை அலசுகிறார் மூத்த கல்வி ஆலோசகர் எம்.வாசு

இந்த ஆண்டு பொறியியல் தேர்வில் கணிதம், இயற்பியல் பாடங்களில் அதிக மாணவர்கள் தோல்வி அடைந்தது ஏன் என்பதற்கு பல்வேறு காரணங்களும், குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன.

அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்று 570 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் கடந்த ஆண்டு பிஇ, பிடெக் படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கான முதலாவது செமஸ்டர் தேர்வு கடந்த நவம்பர், டிசம்பர் மாதத்தில் நடைபெற்றது. இத்தேர்வை 1 லட்சத்து 13,298 மாணவ, மாணவிகள் எழுதினர். தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் திங்கள்கிழமை வெளியிட்டது. தேர்வெழுதியவர்களில் 36,179 பேர் மட்டுமே தேர்ச்சி (32 சதவீதம்) பெற்றனர்.

கடந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஆயிரத்துக்கும் மேல் மதிப்பெண் எடுத்து அதிக கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்களும் செமஸ்டர் தேர்வில் குறிப்பாக கணிதம், இயற்பியல் பாடங்களில் அதிக எண்ணிக்கையில் தோல்வி அடைந்திருப்பது பேராசிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுதியதில், கணிதத்தில் 49,288 பேரும், இயற்பியலில் 59,606 பேரும், வேதியியலில் 60,684 பேரும் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். இதர பாடங்களைப் பொருத்தவரையில், இன்ஜினியரிங் டிராயிங் பாடத்தில் 71,781 பேரும், தகவல் தொடர்பு ஆங்கில பாடத்தில் 91,117 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பொறியியல் தேர்வில் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைந்திருப்பது குறித்தும் அதனால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மூத்த கல்வி ஆலோசகர் எம்.வாசுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

கடந்த ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. ஆனால், முதல் ஆண்டுக்கான பாடத்திட்டத்தை கடைசி நேரம் வரை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடவில்லை. கணித பாடத்திட்டத்தில் டிபரன்ஸியல் கால்குலஸ், இண்டகரல் கால்குலஸ் பாடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டன. இந்த பாடங்கள் மாணவர்களின் திறன்களை மேம்படுத்தக்கூடியவை என்பது உண்மைதான். இப்பாடங்கள் பிளஸ் 1 வகுப்பில் உள்ளன. ஆனால், பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு இல்லாததால் அந்த பாடங்களை பள்ளிகளில் ஆசிரியர்கள் நடத்துவதே கிடையாது. மிகவும் கடினமான இந்த பாடங்களை சாதாரணமாக நன்றாக படிக்கும் மாணவர்கள் கூட புரிந்துகொள்வதற்கு மிகவும் சிரமப்படுவார்கள்.

பிளஸ் 1 வகுப்பில் இந்த பாடங்களை படிக்காத மாணவர்களுக்கு திடீரென பொறியியல் முதல் ஆண்டில் அவற்றை படிக்கும்போது மிகவும் கடினமாகத்தான் இருக்கும். அதனால்தான் கணித பாடத்தில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தோல்வி அடைந்துள்ளனர்.

அதேபோல், முதல் ஆண்டு பொறியியல் படிப்பில் இயற்பியல் பாடத்திலும் புதிய பாடங்கள் சேர்க்கப்பட்டன. அந்த பாடங்களும் பிளஸ் 1 வகுப்பில் உள்ள பாடங்கள்தான். அரசு தேர்வாக இல்லாத காரணத்தினால், பிளஸ் 1 வகுப்பில் இந்த பாடங்கள் நடத்தப்படவில்லை. அதனால், மாணவர்கள் அந்த பாடங்களை படித்திருக்க வாய்ப்பில்லை. ஒரு பாடத்தில் அடிப்படை அறிவு இல்லாமல் திடீரென படிக்கும்போது மாணவர்கள் சிரமப்படத்தான் செய்வார்கள்.

அதனால், பொறியியல் தேர்வில் இயற்பியல் பாடத்திலும் அதிக மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். வழக்கமாக பொறியியல் மாணவர்களுக்கு கணினி பாடமாக "சி பிளஸ்" பாடம் இருக்கும். கடந்த ஆண்டு இதற்குப் பதிலாக பைத்தான் புரோகிராம் என்ற புதிய கணினி பாடம் கொண்டு வரப்பட்டது. சாதாரணமாக, எல்லா ஆசிரியர்களாலும் பைத்தான் பாடத்தை எடுக்க முடியாது. குறிப்பிட்ட சிலரால்தான் இந்த பாடங்களை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் நடத்த முடியும். பல பொறியியல் கல்லூரிகளில் வெளியில் இருந்து ஆட்களை வரவழைத்துத்தான் பைத்தான் புரோகிராம் பாடம் நடத்தப்பட்டது.

தேர்ச்சி குறைவுக்கு பாடத்திட்டம் ஒரு காரணம் என்றால் இன்னொரு முக்கிய காரணம் கடுமையாக்கப்பட்ட மதிப்பீட்டு முறை. கடந்த ஆண்டு மதிப்பீட்டில் தவறு செய்ததற்காக 1,176 பேராசிரியர்கள் மீது அண்ணா பல்கலைக்கழகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. அவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மதிப்பீட்டு பணி அளிக்கப்படாது.

இந்த நடவடிக்கை காரணமாக, இந்த ஆண்டு விடைத்தாள் திருத்திய ஆசிரியர்கள் அச்சம் அடைந்து மதிப்பீட்டில் மிகவும் கடுமை காட்ட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த தேர்ச்சி குறைவு முதல் ஆண்டுடன் நின்றுவிடாது. இதன் பாதிப்பு அடுத்தடுத்த ஆண்டுகள் தொடரும். இன்னும் 3-ம் ஆண்டுக்கான புதிய பாடத்திட்டம் வெளியிடப்படவில்லை.

இதையெல்லாம் பார்க்கும்போது, கடந்த ஆண்டு பொறியியலில் சேர்ந்த மாணவர்களில் எவ்வளவு பேர் பட்டம் வாங்கப் போகிறார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

பாடத்திட்ட மாற்றம், புதிய வழிகாட்டி நெறிமுறைகள் அறிமுகம், இவை குறித்து கல்வியாளர்களுடன் அண்ணா பல்கலைக்கழகம் ஆலோசனை நடத்தி இருக்க வேண்டும். இதுகுறித்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், அதுபோன்ற எந்த பணியையும் அண்ணா பல்கலைக்கழகம் செய்யவில்லை.

இவ்வாறு வாசு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x