Published : 12 Mar 2024 07:11 AM
Last Updated : 12 Mar 2024 07:11 AM
சென்னை: தமிழகத்தின் உண்மையான கலாச்சாரத்தையும், அடையாளத்தையும் அழிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார்.
பேராசிரியர் எம்.எல்.ராஜா எழுதிய பழந்தமிழ் இலக்கியங்களில் பாரத பண்பாடு மற்றும் தமிழ் கல்வெட்டுகளில் பாரத பண்பாடு என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி நூலை வெளியிட்டு பேசியதாவது:
நமது கலாச்சாரமும், ஆன்மிகமும் மிக ஆழமானது. இவற்றைபாதுகாக்க தொழில்நுட்பமும் அவசியம். தமிழ் மண் நூற்றுக்கணக்கான சித்தர்களையும், ரிஷிகளையும் உருவாகியுள்ளது. அது பாரதத்தின் சிந்தனையையும் உருவாகியுள்ளது. தமிழ் மண்ணில் ஒவ்வொரு நகர்விலும் பாரதம் இருக்கிறது. பாரதத்தின் சிந்தனை அடங்கியுள்ளது. பாரத தேசம் என்ற சிந்தனையை ரிஷிகளும் சித்தர்களும் உருவாக்கினர்.
அனைத்தையும் ஒன்றே உருவாகியுள்ளது என்பதுதான் வேதம். பாரதத்தின் அடையாளம் தமிழகத்தில் பிறந்துள்ளது. நாம் வெவ்வேறு உணவு உண்டாலும், வெவ்வேறு உடை அணிந்தாலும் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். வாழ்க்கையில் ஒருமுறையாவது காசி, ராமேசுவரம், துவாரகா, பத்திரிநாத், காஞ்சிபுரம் செல்ல விரும்புகிறோம்.
நம் நாடு பிரிவினையை சந்தித்துள்ளது. வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்தவர்களும், தென்னிந்திய பகுதியை சேர்ந்தவர்களும் நாட்டின் சுதந்திரத்துக்காக செய்த தியாகங்களை மறக்க முடியுமா? ஆங்கிலேயர்கள் சென்ற பிறகும் பிரிவினை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. தமிழகத்தின் உண்மையான கலாச்சாரம், அடையாளத்தை அழிக்க சிலர் முயற்சிக்கிறார்கள். கர்நாடக இசையில் ராமரை பற்றி தியாகராஜர் பாடினார். ஆழ்வார், நாயன்மார்கள் தமிழில் எவ்வளவோ பாடியுள்ளனர்.
கிறிஸ்தவ மிஷனரிகள் மூலமாக தவறான பிரச்சாரம் ஏற்படுத்தப்படுகிறது. ராபர்ட் கால்டுவெல் எழுதிய புத்தகம் உண்மையை சொல்லவில்லை. யார் இந்த கால்டுவெல் என மக்கள் கேட்கிறார்கள். கால்டுவெல் படித்தது வேறு, எழுதியது வேறு. தமிழ் மக்களின் கலாச்சாரத்தையும், அடையாளத்தையும் கால்டுவெல் போன்ற மிஷனரிகள் அழிக்கமுற்பட்டன. காலனி மனப்பான்மையை தமிழ் மக்களின் மனதில் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். இவ்வாறு ஆளுநர் பேசினார்.
இவ்விழாவில், ஆளுநரின் செயலர் ஆர்.கிர்லோஷ்குமார், ஜோகோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் ஸ்ரீதர் வேம்பு, காரைக்குடி அரசு கலைக்கல்லூரி முன்னாள் முதல்வர் என்.வள்ளி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT