Published : 07 Feb 2018 03:40 PM
Last Updated : 07 Feb 2018 03:40 PM

சினிமா பாணியில் அரிவாளால் கேக் வெட்டிய தாதா: புகைப்படம் சிக்கியது

 பூந்தமல்லியில் நேற்றிரவு தாதா பிறந்த நாள் விழாவில் 'ஜிகர்தண்டா' படப் பாணியில் கேக் வெட்டி கொண்டாடியது தெரியவந்தது. தாதா சிக்காமல் தப்பித்தாலும் அவரது படம் மற்ற ரவுடிகள் எடுத்த செல்போனில் சிக்கியது.

சென்னையில் நேற்றிரவு போலீஸார் நடத்திய அதிரடி வேட்டை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போலீஸ் வரலாற்றில் இது போன்ற மெகா ரவுடிகள் வேட்டை நடந்ததில்லை. சினிமாவை மிஞ்சும் அனைத்துக் காட்சிகளும் நேற்று மாலை முதல் நடந்துள்ளது.

பழைய சினிமா படங்களில் உலகின் முக்கிய கடத்தல் புள்ளிகள், ரவுடிகள், தாதாக்கள் ஒன்று கூடுவார்கள். அவர்களைப் பிடிக்க நாயகன் வேஷமிட்டு பாடுவார். அதன் பின்னர் சினிமா உலகின் திரைக்கதை அனைத்தும் மாற்றம் அடைந்தது. சென்னையின் பிரபல தாதாக்களை குறிப்பிடுவது போல் படக்காட்சிகள் எடுக்கப்பட்டது.

பழைய சினிமாவில் வரும் வரி வரி பனியன், கோட்டு சூட்டு போட்டு 'எஸ் பாஸ்' போன்ற காட்சி அமைப்புகள் மாறி யதார்தத்துக்கு வந்தது. ரவுடிகள் சென்னை தமிழ், தூத்துக்குடி பாஷை பேச ஆரம்பித்தார்கள். சினிமாவில் மட்டுமே தாதாவும் அவர்களுக்கு அடியாட்களாக ரவுடிகளும் இருப்பார்கள். அனைவரும் ஒரே இடத்தில் இருப்பார்கள்.

ஆனால் நேற்று நேரில் சென்னையில் அதை போலீஸார் கண்டனர். வாகன சோதனையில் சிக்கிய ரவுடி மதன், 'அண்ணன் பிறந்த நாளுக்குப் போகிறேன்' என்று சொல்ல யார் யார் வருகிறார்கள் என்று கேட்டபோது ஊரில் உள்ள அனைத்து ரவுடிகளும் என்று கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார் அவர்களை திட்டம் போட்டு பிடித்துள்ளனர். இதில் பிறந்த நாளைக் கொண்டாடிய தாதா பினு பிறந்த நாள் கொண்டாடிய விதம் போலீஸார் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சினிமாவில் மட்டுமே இதுபோன்ற காட்சிகள் அமைத்திருப்பார்கள்.

'ஜிகர்தண்டா' படத்தில் பாபி சிம்ஹா கூட்டாளிகளுடன் பிறந்த நாளைக் கொண்டாடும் காட்சியில் அரிவாளால் கேக்கை வெட்டுவார். அதே போல் நேற்றும் லாரி ஷெட் ஒன்றில் மொத்தமாக கூடிய ரவுடிகள் மது அருந்தி, கும்மாளமிட்டு கேக் வெட்டியுள்ளனர். அப்போது பிறந்த நாள் கொண்டாடிய தாதா பினு அரிவாளால் கேக்கை வெட்டியுள்ளார்.

பின்னர் வேறொரு இடத்தில் பிரியாணி விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம். அதற்குள் போலீஸார் சுற்றி வளைத்து விட்டனர். இதில் பிறந்த நாள் கொண்டாடிய பினு உள்ளிட்டோர் தப்பிச் சென்றாலும் கேக் வெட்டிய காட்சிகள் போலீஸாரிடம் சிக்கின. பினுவின் தற்போதைய படம் இல்லாத நிலையில் தாடியுடன் கூடிய பழைய படமே இருந்தது.

ஆனால் நேற்றைய படத்தில் டிப்டாப்பாக தாடியை மழித்து பினு இருக்கும் படம் சிக்கியுள்ளது. மற்ற ரவுடிகளை பிடித்த போலீஸார் பினுவையும் கூட்டாளிகளையும் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x