Published : 08 Mar 2024 07:35 AM
Last Updated : 08 Mar 2024 07:35 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமியின் உடல், பாப்பம்மாள் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. சிறுமிக்கு ஊர் மக்கள் ஒன்று திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
புதுச்சேரி சோலை நகர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 2-ம் தேதி மாயமானார். இந்நிலையில், கடந்த 5-ம் தேதி அதே பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்டு, வேட்டி துணியால் சுற்றப்பட்ட நிலையில், சிறுமியின் உடல் கழிவுநீர் வாய்க்காலில் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீஸார் வழக்கு பதிவுசெய்து, விசாரணை மேற்கொண்டனர். இதில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள், இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் என பல்வேறுதரப்பினரும் புதுச்சேரி நகரமெங்கும் 2 நாட்களாக சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். சிறுமியைக் கொலை செய்ததாக கருணாஸ் (19), விவேகானந்தன் (59) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேலும், தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், சிறுமியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நேற்று முன்தினம் அவரது வீட்டில்வைக்கப்பட்டது. ஆளுநர் தமிழிசை, டிஜிபி ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட பலரும் சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நேற்று நடைபெற்றன.
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்... சிறுமியின் உடலை அடக்கம்செய்வதற்காக, அவரது இல்லத்தில் இருந்து மயானத்துக்கு இறுதிஊர்வலம் புறப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவ, மாணவிகள், சமூக அமைப்பினர், பொதுமக்கள் எனஏராளமானோர் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள், அரசுக்கும், காவல் துறைக்கும் எதிராக கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.
காலை 10 மணிக்கு ஊர்வலம் தொடங்கியது. வழிநெடுகிலும் பொதுமக்கள், சிறுமிக்கு அஞ்சலிசெலுத்தினர். பின்னர், சிறுமியின் உடல் பாப்பம்மாள் கோயில் மயானத்தில், குடும்ப முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. சிறுமியின் உடலுடன் அவரது புத்தகப் பை மற்றும் பொம்மைகள் என அவர் பயன்படுத்திய பொருட்கள் சேர்த்து புதைக்கப்பட்டன.
போலீஸார் இடமாற்றம்: இதற்கிடையே, சிறுமி கொலையில் போலீஸார் அலட்சியம் காட்டியதாக எழுந்த புகாரையடுத்து, முத்தியால்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தனசெல்வம், உதவி ஆய்வாளர் ஜெயகுருநாதன் ஆகியோர் புதுச்சேரி ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு பதிலாக ஆயுதப்படையில் பணிபுரிந்து வந்த ஆய்வாளர் கண்ணன், அரியாங்குப்பம் நிலைய அதிகாரியாக இருந்த உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம் ஆகியோர் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். உதவி ஆய்வாளர் கதிரேசன், அரியாங்குப்பம் நிலைய அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஏஎஸ்ஐ இருசப்பன், தலைமைக் காவலர் ரமேஷ் உள்ளிட்ட 10 காவலர்கள் மற்றும் சோலைநகர் புறகாவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஒருவர் என 11 காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT