Published : 06 Mar 2024 05:50 AM
Last Updated : 06 Mar 2024 05:50 AM

நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழகம் உருவாக வங்கிகள் உதவ வேண்டும்: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள்

நபார்டு வங்கி சார்பில், மாநில கடன் கருத்தரங்கு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்று, 2024-25-ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த மாநில அறிக்கையை வெளியிட்டார். உடன் (இடமிருந்து) நபார்டு வங்கி பொது மேலாளர் ஜோதி சீனிவாஸ், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செயல் இயக்குநர் எஸ்.ஸ்ரீமதி, ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் உமா சங்கர், நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டல அலுவலக தலைமைப் பொதுமேலாளர் ஆர்.சங்கர் நாராயணன், நிதித்துறை செயலாளர் உதயசந்திரன், இந்தியன் வங்கியின் செயல் இயக்குநர் ஷிவ் பஜ்ரங் சிங்.

சென்னை: நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழகம் உருவாக வங்கிகள் உதவ வேண்டும் என தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள் விடுத்தார்.

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு)சார்பில் 2024-25-ம் ஆண்டுக்கான மாநில கடன் கருத்தரங்கு சென்னையில் நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, 2024-25-ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த மாநில அறிக்கையை வெளியிட்டுப் பேசியதாவது: நபார்டு வங்கி வெளியிட்டுள்ள வளம் சார்ந்த மாநில அறிக்கை, வங்கிகள் மற்றும் தமிழக அரசுக்கு அடிப்படை மேம்பாட்டு வசதிகள் மற்றும் கடன் வழங்குவதற்குத் தேவையான நிதியை ஒதுக்குவதற்கு உதவுகிறது.

கரோனா தொற்று, 2023-ல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களை மாநில அரசு சந்தித்தது. கடந்த 10 ஆண்டுகளாக தமிழகம் ஆண்டுதோறும் 11 முதல் 12 சதவீதம் அளவுக்கு ஒட்டுமொத்த வளர்ச்சி அடைந்து வருகிறது. தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் வசிக்கும் 45 சதவீத மக்களுக்கு விவசாயம் வாழ்வாதாரமாகத் திகழ்கிறது. சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான தொழிற்சாலைகள் அதிக அளவு உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக, மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உழவர்கள் தாங்கள் தயாரிக்கும் பொருட்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்வதற்கு, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை அமைக்க தமிழக அரசு உதவி வருகிறது. இதன் மூலம், உள்ளூர் மக்கள், உள்ளூர் தயாரிப்புகளை வாங்கும் கனவு நனவாகிறது.

நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழகம் உருவாக வேண்டும் என்ற கனவை நனவாக்க வங்கிகள் உதவ வேண்டும். தமிழகத்தில் கிராமப்புற கட்டமைப்புகளை ஏற்படுத்த 47,900 திட்டங்களுக்கு ரூ.34,304 கோடி கடனை நபார்டு வங்கியிடம் இருந்து தமிழக அரசு பெற்றுள்ளது.

மேலும், நீர்ப்பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்களுக்காக ரூ.6,529 கோடியும், மீன்வளம், பால் வளம், உணவுப் பதப்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ.2,369 கோடியும் கடன் உதவி பெறப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டல அலுவலக தலைமைப் பொதுமேலாளர் ஆர்.சங்கர் நாராயணன் பேசும்போது ‘‘தமிழகத்தில் 2024-25-ம் ஆண்டுக்கான வளம் சார்ந்த மாநில அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில், முன்னுரிமைத் துறைகளுக்கு ரூ. 8 லட்சத்து 34 ஆயிரத்து 78 கோடிகடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் விவசாயத் துறைக்கு ரூ.3.74 லட்சம் கோடி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கு ரூ.1.42 லட்சம் கோடியும், விவசாய்ம் சார்ந்ததுறைகளுக்கு ரூ.3.17 லட்சம் கோடி கடன் வழங்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் வளர்ச்சிஏற்படுவதுடன், 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கை அடைய உதவும்’’ என்றார்.

இந்தக் கருத்தரங்கில், தமிழகஅரசின் நிதித்துறை செயலாளர் உதயசந்திரன், ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநர் உமா சங்கர், இந்தியன் வங்கி செயல் இயக்குநர் ஷிவ் பஜ்ரங் சிங், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல் இயக்குநர் எஸ்.ஸ்ரீமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x