Published : 05 Mar 2024 06:00 AM
Last Updated : 05 Mar 2024 06:00 AM

வேலைவாய்ப்பில் அதிக நம்பிக்கை தரும் ஐடி துறை: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெருமிதம்

அசோசியேஷன் ஆஃப் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்ஸ், சென்னை சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற ‘சிஏ. மகாவீர் முனோத்’ நினைவு சொற்பொழிவு நிகழ்வில், தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார். உடன் (இடமிருந்து) அசோசியேஷன் ஆஃப் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்ஸ், சென்னை அமைப்பின் செயலர் விக்ரம் சிங்வி, தலைவர் ராகேஷ் சிங்வி, மகாவீர் முனோத் மூத்த சகோதரர் உகம்ராஜ் முனோத், ‘சிஏ. மகாவீர் முனோத் நினைவு அறக்கட்டளை’ கமிட்டி தலைவர் பி.ராஜேந்திரகுமார், மகாவீர் முனோத் நிறுவனப் பங்குதாரர் எஸ்.பிரவீன் குமார், பொருளாளர் எம்.நவரதன் ஆகியோர். படம்: ம.பிரபு

சென்னை: தமிழகம் தகவல் தொழில்நுட்பத் துறையில் வியக்கத்தக்க வளர்ச்சி அடைந்திருப்பதால் அனைத்து தரப்பினருக்கும் குறிப்பாக மாணவர்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் அதிகநம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெருமிதம் தெரிவித்தார்.

அசோசியேஷன் ஆஃப் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்ஸ், சென்னை அமைப்பு சார்பில் `சிஏ.மகாவீர் முனோத்' நினைவு சொற்பொழிவும், தமிழ்நாட்டில் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் படிக்கும் மாணவ,மாணவியருக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சியும் சென்னை மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அசோசியேஷன் ஆப் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்ஸ், சென்னை தலைவர் ராகேஷ் சிங்வி வரவேற்புரையாற்றினார். சிஏ. மகாவீர் முனோத் நினைவு அறக்கட்டளை கமிட்டி தலைவர் பி.ராஜேந்திரகுமார் தலைமை உரையாற்றும் போது, ``சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் படிக்கும் மாணவ, மாணவியரை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறோம். அதன் அடிப்படையில் இந்தாண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த 41 பேருக்கு ரூ.5லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது'' என்றார்.

பின்னர் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல்தியாகராஜன் பேசியதாவது: `சிஏ. மகாவீர் முனோத்' நினைவாக சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் படிக்கும் மாணவ, மாணவியருக்கு உதவித் தொகை வழங்குவது புனிதப்பணியாகும். நாட்டில் 1980-களில்பர்சனல் கம்ப்யூட்டர் வந்தபோதே கம்ப்யூட்டர் புரட்சி ஏற்படத் தொடங்கிவிட்டது. கம்ப்யூட்டர் பயன்பாட்டில் மவுனப் புரட்சி நிகழ்ந்தது. இன்றுசெயற்கை நுண்ணறிவு வரை பெரும்புரட்சியை நிகழ்த்தி வருகிறது.

தமிழகத்தில் முதன்முதலில் சென்னை தரமணியில் `டைடல் பார்க்' என்ற தகவல் தொழில்நுட்பப் பூங்காவை முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடங்கிவைத்தார். பின்னர் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டுக் கொள்கை உருவாக்கப்பட்டது. மென்பொருள் ஏற்றுமதியில் தமிழகம் பெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

பிற நகரங்களைவிட தமிழகத்தில் தொழில் செய்வதற்கான இடம்,தொழில்நுட்பம், சிறந்த பணியாளர்கள் கிடைப்பதாலும், அதிவேக இணைய இணைப்பு, டிஜிட்டல்மயமாக்கல் போன்றவற்றாலும் முதலீட்டாளர்கள், பெருநிறுவனங்கள் அதிகஅ்ளவில் ஈர்க்கப்படுகின்றன.

தகவல் தொழில்நுட்பத் துறையின் வியக்கத்தக்க வளர்ச்சியால் மாணவர்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.

நிறைவில், அசோசியேஷன் ஆப் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்ஸ், சென்னை அமைப்பின் செயலர் விக்ரம் சிங்வி நன்றி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x