Published : 27 Feb 2018 08:56 AM
Last Updated : 27 Feb 2018 08:56 AM

10 நாட்களில் இணைய வழியில் 60 ஆயிரம் ஆவணங்கள் பதிவு: பதிவுத் துறை தலைவர் தகவல்

இணையவழி ஆவணப்பதிவு தொடங்கப்பட்ட 10 நாட்களில் தமிழகம் முழுவதும் 59,890 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 10,833 ஆவணங்கள் பதிவாகியுள்ளன.

தமிழக பத்திரப்பதிவுத் துறையில் இணைய வழி ஆவணப்பதிவுக்கான புதிய மென்பொருள் ‘ஸ்டார் 2.0’ உருவாக்கப்பட்டு, பரிட்சார்த்த முறையில் குறிப்பிட்ட சில சார்-பதிவாளர் அலுவலகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. மக்களிடம் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, கடந்த பிப்.13-ம் தேதி இத்திட்டம் தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டது. தொடக்கத்தில் இத்திட்டத்தின் கீழ் ஆவணங்களை பதிவு செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டன. அவை சரி செய்யப்பட்டு, தற்போது முழுமையாக ஆவணப்பதிவு நடக்கிறது..

ஆவணத்தை தயாரித்து முன் சரிபார்ப்பு செய்தல், வழக்கறிஞர்களே ஆவணங்களை தயாரிக்க வசதி, இணைய மையங்களில் ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட வசதிகள், இணையவழி ஆவணப் பதிவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இத்திட்டம் தொடங்கப்பட்டு நேற்றுடன் 10 பணி நாட்கள் முடிந்துள்ளன. இதுவரை 59,890 ஆவணங்கள் பதிவாகியுள்ளன. தமிழகம் முழுவதும் 9 மண்டலங்களில் 575 சார்-பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன.

வழக்கமாக சாதாரண நாட்களில் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பதிவுகளும், அமாவாசை, முகூர்த்த நாட்களில் 8 ஆயிரம் பதிவுகளும் நடக்கும். நேற்று ஒரு நாளில் மட்டும் 10,833 பதிவுகள் நடந்துள்ளதாகவும், கடந்த 10 நாட்களில் மதுரை மண்டலத்தில் அதிகபட்சமாக 10,087 ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அடுத்ததாக, சென்னை மண்டலத்தில் 9,522 பதிவுகள் நடந்துள்ளதாக பதிவுத்துறை தலைவர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 10 நாட்களில் மண்டல வாரியாக நடந்துள்ள பதிவுகள் வருமாறு:

மதுரை - 10,087, சென்னை - 9,522, நெல்லை - 6,968, கோவை - 7,628, வேலூர் - 6,436, சேலம் - 6,155, திருச்சி - 5,369, கடலூர் - 4,621, தஞ்சை - 3,104.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x