Published : 29 Feb 2024 06:10 AM
Last Updated : 29 Feb 2024 06:10 AM
சென்னை: கொருக்குப்பேட்டையில் இருந்து அசாம் மாநிலம் குவாஹாட்டியில் அஜாரா ரயில் நிலையத்துக்கு சரக்கு விரைவு ரயிலின் முதல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பயணம் மூலமாக ரயில்வேக்கு ரூ.11.25லட்சம் வருவாய் கிடைக்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயில்வேயில் சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்த வணிக மேம்பாட்டுக் குழு கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தக் குழுவின் உறுப்பினர்கள், ரயில்வேயில் சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்தனர்.
ஆட்டோமொபைல் உட்பட பல்வேறு விதமானபொருட்களை எடுத்தும் செல்லும் விதமாக ரயில் பெட்டிகள் வடிவமைப்பு செய்தல், சரக்குகளை எளிதாக கையாள ரயில் நிலையத்தில் வசதி, ரயில்வேயில் சரக்குகளை எடுத்துச்செல்வது தொடர்பாக பெரு நிறுவனங்களை நேரடியாக தொடர்பு கொள்ளுதல், சிறப்பு சலுகை அளித்தல் ஆகிய முயற்சிகளை எடுத்தனர்.
இதையடுத்து, சரக்கு ரயில் போக்குவரத்து அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக, சென்னையில் இருந்து வெகு தொலைவில் உள்ள நகரங்களுக்கும் விரைவாக, பாதுகாப்பாக சரக்குகளை எடுத்துச் செல்ல முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சென்னை கொருக்குப்பேட்டையில் இருந்து அசாம் மாநிலம் குவாஹாட்டியில் அஜாரா ரயில் நிலையத்துக்கு சரக்கு விரைவு ரயிலின் முதல் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: இந்தவிரைவு ரயில் சென்னையில் இருந்து புறப்பட்டு விஜயவாடா, கொல்கத்தா வழியாக அசாம் மாநிலம் குவாஹாட்டி வரையிலான சுமார் 2,500 கி.மீ. தொலைவை சுமார் 72 மணி நேரத்தில் கடக்கும்.
ஒரு மாதத்துக்கு குறைந்தபட்சம் இருமுறை இயக்கப்படும். முதல் 6 மாதங்களில் ஒரு பயணத்துக்கு 364 டன் சுமந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், கார் டயர்கள், சாக்லேட், கைத்தறி பொருட்கள், மின்னணு பொருட்கள் உள்ளிட்ட நுகர்வோர் பொருட்கள்மற்றும் தென்னை நார் பொருட்கள் எடுத்துச் செல்லப்படும்.
ஒரு பயணத்துக்கு குறைந்தபட்சமாக ரயில்வேக்கு ரூ.11.25 லட்சம் வருவாய்கிடைக்கும். இதற்கு ஏவிஜி நிறுவனத்துடன் 6 ஆண்டுக்கு ரூ.105 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். முன்னதாக, இந்த முதல் சேவையை சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் பி.விஸ்வநாத் ஈர்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT