Published : 21 Feb 2018 08:04 AM
Last Updated : 21 Feb 2018 08:04 AM

சென்னையில் இருந்த 126 ஆண்டு கால பாரம்பரியமிக்க டாக்டர் அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரி காஞ்சி, திருவள்ளூருக்கு மாறுகிறது

126 ஆண்டு பாரம்பரியமிக்க சென்னை சட்டக்கல்லூரி, வரும் கல்வியாண்டு முதல் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூருக்கு மாறு கிறது. சர்வதேச தரத்திற்கேற்ப டிஜிட்டல் லேப் மற்றும் 2 ஆயிரம் பேர் அமர்ந்து படிக்கும் ஹை- டெக் நூலக வசதியுடன் அமைக் கப்படுகிறது.

சென்னை பாரிமுனையில் ஆங்கிலேயர்களால் 1891-ல் தொடங்கப்பட்ட டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி, உயர் நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வருகிறது. இது இந்தியாவின் இரண்டாவது தொன்மையான கல்லூரி என்ற பெருமைக்குரியது.

ஆரம்பத்தில் மெட்ராஸ் சட்டக் கல்லூரி என இருந்த இக்கல்லூரி 1990-ல் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியாக பெயர் மாற்றம் கண்டது.

இந்து-இஸ்லாம் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் ஆங்கிலேயப் பொறியாளர் ஹென்றி இர்வின் என்பவரால் வடிவமைக்கப்பட்ட இந்தக் கல்லூரி கட்டிடம், தற்போது 126-ம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது.

பதஞ்சலி சாஸ்திரி, ப.சதாசிவம் போன்ற முன்னாள் இந்திய தலைமை நீதிபதிகளையும், வி.ஆர்.கிருஷ்ணய்யர் உள்ளிட்ட 37 உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் 1000-க்கும் மேற்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகளையும், ப.சிதம்பரம் போன்ற முன்னாள் மத்திய அமைச்சர்களையும், கோட்லா விஜய பாஸ்கர ரெட்டி போன்ற மாநில முதல்வர்களையும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சி.சங்கரன் நாயர் மற்றும் இந்நாள், முன்னாள் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பலரையும் உருவாக்கிய பெருமை இக்கல்லூரிக்கு உண்டு.

கடந்த 2008-ம் ஆண்டு இக்கல்லூரியில் வெடித்த திடீர் வன்முறை குறித்து விசாரணை நடத்திய நீதிபதி சண்முகம் ஆணையம் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், இக்கல்லூரியின் 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு இளங்கலை சட்டப்படிப்பு 2-ஆகப் பிரிக்கப்பட்டு, சென்னைக்கு வெளியே காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கத்திலும், திருவள்ளூர் மாவட்டம் பட்டரைப் பெரும்புதூரிலும் ரூ.117 கோடி செலவில் 2 பிரம்மாண்ட கல்லூரிகளாக கட்டப்பட்டுள்ளன.

இந்த 2 கல்லூரிகளும் அகில இந்திய பார் கவுன்சில் விதி களின்படி சர்வதேச தரத்துக்கு இணையாக உருவாக்கப்பட்டுள்ளது. சட்டக்கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் ஸ்மார்ட் வகுப்பறைகள், ஒரே நேரத்தில் 150 பேர் அமர்ந்து உலகளாவிய நீதிமன்ற தீர்ப்புகளை ஆராய்ந்து பயில சர்வதேச லிங்க் வசதியுடன் கூடிய டிஜிட்டல் லேப், மாதிரி நீதிமன்றம், தமிழ் மற்றும் ஆங்கில வழி மாணவர்களுக்கான மொழிப் பயிற்சி, 2 ஆயிரம் மாணவர்கள் அமர்ந்து சட்ட நூல்களைப் பயில பிரம்மாண்ட நூலகம், 500 மாணவர்கள் அமரும் காணொலி காட்சி அரங்கம், 1000 மாணவர்கள் அமரும் வகையில் கலையரங்கம், உள் விளையாட்டரங்கம், வெளி விளையாட்டரங்கம், ஆண், பெண்களுக்கென தனித் தனி விடுதிகள், உடல் ஊனமுற்றோருக்கான பிரத்யேக வசதிகள் என அனைத்து வசதிகளும் நவீனமாக செய்யப்பட்டுள்ளன.

சென்னை சட்டக்கல்லூரியின் மாண்பை போற்றும் வகையில், இந்த கல்லூரிகளுக்கும், ‘சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி – புதுப்பாக்கம்’ என்றும், ‘சென்னை டாக் டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல் லூரி – பட்டரைப் பெரும்புதூர்’ எனப் பெயரிட்டு, வரும் கல்வி ஆண்டு முதல் இக்கல்லூரிகளைத் தொடங்குவது குறித்தும், எங்கு 3 ஆண்டு படிப்பு, எங்கு 5 ஆண்டு படிப்பைத் தொடங்கலாம் என்பது குறித்தும் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், அரசு அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக சட்டக்கல்வி இயக்குநரும், டாக்டர் அம்பேத் கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் பொறுப்பு துணைவேந்தருமான டாக்டர் என்.எஸ்.சந்தோஷ்குமாரிடம் கேட்டதற்கு, ‘‘இந்த கல்லூரிகளை முறைப்படி தொடங்குவது குறித்தும், சென்னை பாரிமுனை யில் தற்போது உள்ள கட்டிடத்தை சட்டக் கல்விக்கான முதுநிலை ஆராய்ச்சி மையமாக மாற்றுவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது. எனவே இப்போதைக்கு இதுகுறித்து கருத்து கூற இயலாது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x