Last Updated : 20 Feb, 2024 12:22 PM

2  

Published : 20 Feb 2024 12:22 PM
Last Updated : 20 Feb 2024 12:22 PM

செல்வப்பெருந்தகைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி ‘சாத்தியம்’ ஆனது எப்படி?

கக்கன், இளையபெருமாளுக்கு அடுத்ததாக 45 ஆண்டுகள் கடந்து பட்டியலினத்தைச் சேர்ந்த செல்வப் பெருந்தகை காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கிறார். இது எப்படி சாத்தியமானது? செல்வப்பெருந்தகை சாதிக்கப் போவது என்ன?

காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை 3 ஆண்டுகள் மட்டுமே நிர்வகிக்க முடியும். ஆனால், கடந்த 5 ஆண்டுகள் கடந்தும் கே.எஸ்.அழகிரி தலைமைப் பொறுப்பில் நீடித்தார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே ‘காங்கிரஸ் தலைமைப் பொறுப்பு மாற்றப்படும்’ என சொல்லப்பட்டு வந்தது. குறிப்பாக, தலைவர் பதவி ரேசில் செல்வப்பெருந்தகை, கார்த்திக் சிதம்பரம், ஜோதிமணி பெயர்கள் அடிபட்டன. இதனால், இவர்கள் டெல்லியில் முகாமிட்டு வந்தனர்.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், தலைமை பொறுப்பை செல்வப் பெருந்தகைக்கு வழங்கியிருக்கிறது காங்கிரஸ். கக்கன், இளையபெருமாளுக்கு அடுத்ததாக 45 ஆண்டுகள் கடந்து பட்டியலினத்தைச் சேர்ந்த செல்வப்பெருந்தகை காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்கவிருக்கிறார்.

செல்வப்பெருந்தகை பின்னணி என்ன? - ரிசர்வ் வங்கி பணியாளராக இருந்த செல்வப்பெருந்தகை, சுமார் 25 ஆண்டுக்கு முன் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தார். 2000-ம் ஆண்டு தொடக்கத்தில், புதிய பாரதம் கட்சியில் இணைந்து அரசியல் பயணத்தைத் தொடங்கினார். அதன்பின் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகத்தில் இணைந்தார். பின்னர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்து 2006 சட்டமன்ற தேர்தலில் கடலூர் மாவட்டத்தின் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அக்கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்தவர்.

விசிகவிலிருந்தும் விலகி 2008-ல் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து அக்கட்சியின் மாநில தலைவரானார். பின்னர், 2010-ல் தான் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2011, 2016 தேர்தல்களில் முறையே செங்கம், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய செல்வப்பெருந்தகை, 2021 தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வெற்றி பெற்றார்.

தலைமை பொறுப்பு கொடுக்கப்பட்டது எப்படி? - 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற இவர் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனால், திமுகவிடம் இவருக்கு நெருக்கமான உறவு ஏற்பட்டது. முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் காலம் முடிவுக்கு வரும் நிலையில், அந்தப் பொறுப்புக்கு காய்களை நகர்த்தத் தொடங்கினார். ஆனால், அழகிரி தன் டெல்லி லாபியால் பல ஆண்டுகள் அந்தப் பொறுப்பில் நீடித்தார்.

சமீபகாலமாக அழகிரிக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையேயான மோதல் போக்கு உச்சத்தைத் தொட்டது. குறிப்பாக, தேர்தலுக்காக தமிழக மேலிட பொறுப்பாளராக அஜோய்குமார் மாற்றப்பட்டார். இதில், அழகிரிக்கு உடன்பாடு இல்லை என சொல்லப்படுகிறது. இந்த மோதல் பூத் கமிட்டி தொடர்பான வீடியோ கான்பிரன்ஸ் மீட்டிங்கில் மேலும் வெடித்தது. ஜோதிமணிக்கும் அழகிரிக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது.

இதில் கடுப்பான அஜோய்குமார், ‘காங்கிரஸ் தலைவராக அழகிரி நீடிக்கக் கூடாது’ என்பதைத் தலைமையிடம் சொல்லியிருக்கிறார். இந்தச் சிக்கல் காரணமாகத்தான் தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் தமிழக வருகை தள்ளிப்போனது.

இந்த நிலையில், தேர்தல் பொறுப்பாளருக்கு மாநில தலைவருக்கும் இடையே மோதல் போக்கு இருந்தால் அது தேர்தலைப் பாதிக்கும். இதனால் கட்சித் தலைமை செல்வப்பெருந்தகையைத் தலைவராக நியமித்துள்ளது. தவிர, அஜோய்குமாருக்கும் செல்வப்பெருந்தகைக்கும் இடையே நல்ல உறவு இருப்பதும் குறிப்பிடதக்கது.

இதில், காங்கிரஸின் வியூகங்கள் இல்லாமல் இல்லை. தமிழகத்தில், காங்கிரஸில் பட்டியலின தலைவரை நியமித்ததன் வாயிலாக தங்களுக்கு பட்டியலின மக்கள் ஆதரவு கிடைக்காது என்னும் பிம்பத்தை உடைக்க செல்வப்பெருந்தகை முன்னிறுத்தப்பட்டிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

குறிப்பாக, 2010-ல் செல்வப்பெருந்தகை காங்கிரஸில் இணையும் நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம், "செல்வப்பெருந்தகை தலைமையில் ஏராளமான தலித் தலைவர்கள் கட்சியில் இணைந்துள்ளனர். இதனால், மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு தலித் தலைமை கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது" என்றார். 14 ஆண்டுகள் கழித்து ப.சிதம்பரம் பேசியது நடந்திருக்கிறது.

அணி எனும் பிணி! - செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “கட்சியில் அணி என்பது, அக்கட்சியை பிடித்திருக்கும் பிணி. அதை ஒழிப்போம். அரசியல் என்பது ஒரு கூட்டு முயற்சி. அனுபவம் வாய்ந்த தலைவர்கள் கட்சியில் இருக்கிறார்கள். அவர்களுடன் ஆலோசித்து கட்சியை வளர்க்கவும், வலிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனப் பேசினார்.

காங்கிரஸ் கட்சியில் தலைவர் மாற்றம் தள்ளிப்போனதுக்கு காரணம் இந்த சிக்கல்தான். ஆனால், இந்த அணிகளைச் சமாளிப்பதும் செல்வப்பெருந்தகைக்கு முக்கியமான டாஸ்க்காக இருக்கும். பல கட்சிகள் தாவி விட்டு காங்கிரஸில் அடைக்களம் புகுந்தவர் செல்வப்பெருந்தகை. இப்படி மாற்று கட்சியிலிருந்து வந்தவருக்கு தலைவர் பதவியைத் தலைமை தூக்கிக் கொடுத்துவிட்டதே என்னும் வருத்தம் பல நிர்வாகிகளுக்கும் இருக்கத்தான் செய்கிறது. அதற்கு தன் செயல்பாடுகள் வாயிலாகப் பதில் சொல்ல வேண்டிய கடமை செல்வப்பெருந்தகைக்கு இருக்கிறது.

இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், தொகுதிப் பங்கீட்டில் உரிய இடம் பெறுவது, எண்ணிக்கையைக் குறைக்காமல் கைப்பற்றுவது, அதில் வேட்பாளர்களை வெல்ல வைப்பது என தன் தலைமைப் பண்பை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் செல்வப்பெருந்தகைக்கு உருவாகியுள்ளது. அதைத் திறம்பட செய்வாரா என்பதைப் பொறுந்திருந்து பார்ப்போம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x