Last Updated : 06 Feb, 2018 08:05 AM

 

Published : 06 Feb 2018 08:05 AM
Last Updated : 06 Feb 2018 08:05 AM

பட்டியலில் 500 பேர்... முதலிடத்தில் தமிழகம்: 96 பேரிடம் ரூ.800 கோடி பினாமி சொத்து பறிமுதல் - வருமானவரி துறை நடவடிக்கை

தமிழகத்தில் 500-க்கும் அதிகமானவர்கள் பினாமி சொத்துகள் வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதில் முதல்கட்டமாக, 96 பேரிடம் இருந்து ரூ.800 கோடி மதிப்புள்ள பினாமி சொத்துகளை வருமானவரித் துறை பறிமுதல் செய்துள்ளது.

பினாமி சொத்துகளை கைப்பற்றும் வகையில் வருமானவரிச் சட்டத்தில் 1976, 1988-ம் ஆண்டுகளில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. ஆனாலும், இதை செயல்படுத்துவது குறித்து போதிய வழிகாட்டல்கள், விளக்கங்கள் இல்லாததால் இச்சட்டம் ஏட்டளவிலேயே இருந்தது. அதைத் தொடர்ந்து, பினாமி சொத்துகள் சட்டத்தில் மேலும் திருத்தங்கள் செய்யப்பட்டன. பினாமி சொத்துகளை பறிமுதல் செய்ய தனி ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் தலைவராக வருமானவரித் துறை ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். திருத்தம் செய்யப்பட்ட சட்டம் கடந்த 2016 நவம்பர் 1-ம் தேதி அமலுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து, பினாமி சொத்துகள் மீதான பிடி இறுகியது.

500, 1000 ரூபாய் நோட்டுகளில் பெரும் பகுதி பினாமி சொத்துகளில் முதலீடு செய்யப்பட்டிருந்தன. இதை கருத்தில் கொண்டே, பணமதிப்பு நீக்க நடவடிக்கையும், பினாமி சொத்துகள் மீதான நடவடிக்கையும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, வங்கி பணப் பரிவர்த்தனை, தங்க நகை விற்பனை, ரியல் எஸ்டேட் போன்றவற்றை கண்காணிக்க நாடு முழுவதும் 24 இடங்களில் சிறப்பு மையங்களை வருமானவரித் துறை ஏற்படுத்தியது.

சிறப்பு மைய அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பினாமி சொத்துகள் தொடர்பாக கடந்த ஆண்டில் மட்டும் 1,300-க்கும் மேற்பட்ட பரிமாற்றங்கள் நடந்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக இதுவரை மொத்தம் 1,100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 900 பேரிடம் இருந்து ரூ.3,500 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமானவரித் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 96 பேர்

தமிழகத்தில் இருக்கும் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் சிலர் கடந்த ஆண்டில், ரூ.2,000 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதை வருமானவரித் துறையினர் கண்டுபிடித்தனர். மற்ற மாநிலங்களைவிட, தமிழகத்தில்தான் வரி ஏய்ப்பு அதிகம் நடந்திருப்பதும் தெரியவந்தது. இதனால் தமிழகத்தில் பினாமி சொத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து வருமானவரித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் மட்டும் 500-க்கும் அதிகமானவர்கள் பினாமி சொத்துகள் வைத்திருக்கின்றனர். அவர்களது பட்டியலை தயார் செய்துள்ளோம். முதல்கட்டமாக, இதில் 96 பேரிடம் இருந்து ரூ.800 கோடி மதிப்புள்ள பினாமி சொத்துகளை பறிமுதல் செய்துள்ளோம். இதில் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.350 கோடி. எஞ்சியுள்ள ரூ.450 கோடி, பல்வேறு வங்கிகளில் பணமாக முதலீடு செய்யப்பட்டுள்ளது. பினாமி சொத்து வைத்திருப்பதில், நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் ஒருவர் ரூ.246 கோடி டெபாசிட் செய்திருந்தார். வருமானவரித் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவர் ‘பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா’ திட்டத்தின் கீழ் தாமாக முன்வந்து வரி, அபராதம் செலுத்த ஒப்புக்கொண்டது தெரியவந்தது. இந்த திட்டத்தின் கீழ், தான் செலுத்திய டெபாசிட் தொகையில் 50 சதவீதத்தை அபராதமாக செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் மட்டுமே இப்படி ஒரு சம்பவம் நடந்தது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது, நாடு முழுவதும் 27,739 வங்கி கணக்குகளில் தலா ரூ.2.50 லட்சத்துக்கும் அதிகமான தொகை டெபாசிட் செய்யப்பட்டது. இந்த வங்கி கணக்குகளில் மொத்தம் ரூ.3,600 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தங்கள் வருமானம் குறித்த விவரங்களை அளிக்குமாறு வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில் 18,220 பேரிடம் இருந்து பதில் வந்துள்ளது. மற்றவர்கள் இன்னும் விளக்கம் அளிக்கவில்லை.

மேலும், அதிக தொகை டெபாசிட் செய்த 441 வங்கி கணக்குதாரர்கள் சரியான முகவரி கொடுக்கவில்லை. இதனால், அவர்களைப் பற்றிய விவரங்களை சேகரிக்க முடியவில்லை. இந்த 441 வங்கி கணக்குகளில் மட்டும் ரூ.240 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

7 ஆண்டு சிறை தண்டனை

சம்பந்தப்பட்ட சொத்து, பினாமி சொத்து என்று விசாரணையில் உறுதிசெய்யப்பட்டால், அதன் உண்மையான உரிமையாளருக்கு 1 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். சம்பந்தப்பட்ட சொத்து பறிமுதல் செய்யப்படுவதுடன், அந்த சொத்தின் சந்தை மதிப்பில் 25 சதவீதத்தை அபராதமாகவும் செலுத்த வேண்டும். பினாமியாக செயல்பட்டவர்களுக்கும் தண்டனை உண்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x