Published : 26 Feb 2024 05:54 AM
Last Updated : 26 Feb 2024 05:54 AM
கும்பகோணம்: தமிழக அரசின் வரவு பற்றாக்குறையாக இருக்கும்போது, இலவசங்கள் கொடுப்பது எந்த விதத்தில் நியாயம் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியது:திருச்சியில் நடைபெற்ற கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் நிர்வாகிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர். தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஓரிருவாரங்களில் முடிவெடுத்து அறிவிக்கப்படும்.
நடிகர் விஜய் 2026-ல் நடைபெறும் தேர்தலுக்குத்தான் வருவதாக அறிவித்துள்ளார். அப்படி இருக்கும்பட்சத்தில் தற்போதைய அரசியலில் அதன் தாக்கம் எப்படி இருக்கும் எனக் கூற முடியாது.
தமிழகத்துக்கு 8.33 லட்சம் கோடி கடன் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் வரவு குறைவாகவும், செலவு அதிகமாகவும் இருப்பது தான். வரவு பற்றாக்குறையாக இருக்கும்போது, இலவசங்கள் கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்என தெரியவில்லை. தமிழக மக்கள்கடன் சுமையுடன் வாழ்ந்து வருகிறோம்.
தொழில் வளம் பெருக்க வேண்டும். புதிய தொழிற்சாலைகள் உருவாக வேண்டும். வரவு அதிகரிக்க உற்பத்தியை பெருக்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். ஆனால், தொழில் வளத்தைப் பெருக்கி வருமானத்தை உயர்த்தும்திட்டம் எதுவும் பட்ஜெட்டில் இல்லை. நம்முடைய கடனை தீர்ப்பதற்கான எந்த ஒரு முற்போக்கான திட்டத்தையும் அரசு தீட்டவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT