Published : 25 Feb 2024 02:58 PM
Last Updated : 25 Feb 2024 02:58 PM

போதைப்பொருள் கடத்தல் | திமுக பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க அண்ணாமலை வலியுறுத்தல்

அண்ணாமலை | கோப்புப்படம்

சென்னை: திமுகவில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவரே, இத்தனை ஆண்டுகளாக சென்னையில் இருந்து கொண்டு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்திருப்பது, பலத்த சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. எனவே, உடனடியாக தமிழக அரசு போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “டெல்லியில், சுமார் 2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களைக் கடத்த முயன்ற கும்பல், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது. விசாரணையில், இவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்தக் கும்பலின் தலைவனாகச் செயல்பட்டவர், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் என்பதும், அவரது சகோதரரான, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மண்டல துணைச் செயலாளர் முகமது சலீம் மற்றும் மைதீன் ஆகியோர் அவருக்குத் துணையாகச் செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது.

இவர்கள், கடந்த மூன்று ஆண்டுகளில், சுமார் 3,500 கிலோ போதைப் பொருள்களை, 45 முறை வெளிநாடுகளுக்கு அனுப்பியிருக்கலாம் என்றும் அதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை, போதைப் பொருள்கள் மூலம் இவர்கள் சம்பாதித்திருக்கலாம் என்பதும் தெரிய வந்துள்ளது.

போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் தேடப்பட்டுவரும் திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் என்பவர், இந்தப் பணத்தை, தமிழ்த் திரைப்படங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தியுள்ளதும், மேலும் போதைப் பொருள்கள் கடத்தல் மூலம் கிடைத்த லட்சக்கணக்கான பணத்தை, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோரிடம், தமிழக அரசு நிவாரண நிதியாக வழங்கியுள்ள புகைப்படங்களும், அமைச்சர் சேகர்பாபுவுடன் இருக்கும் புகைப்படங்களும், மற்றொரு தேடப்படுபவரான, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மண்டல துணைச் செயலாளர் முகமது சலீம் என்பவர், விசிக தலைவர் திருமாவளவன் அவர்களிடம் கட்சி நிதி வழங்கியுள்ள புகைப்படங்களும், சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. மேலும், தமிழ்த் திரைத் துறையில் பல இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் இவர்கள் நெருங்கியத் தொடர்பில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியிருக்கின்றன.

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, தமிழகத்தில் போதைப் பொருள்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதையும், பள்ளி மாணவர்கள் வரை, போதைப் பொருள்களின் தாக்கம் பரவியிருப்பதையும், தமிழகத்தில் போதைப் பொருள்கள் பரவலாகக் கிடைத்து வருவதாக ஊடகங்களில் வரும் செய்திகளையும், தமிழக பாஜக சார்பாக எடுத்துக் கூறி, கடுமையான நடவடிக்கைகள் எடுக்குமாறு திமுக அரசை பல முறை வலியுறுத்தியும், இதுவரை உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுத்ததாகத் தெரியவில்லை. தற்போது, திமுகவில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவரே, இத்தனை ஆண்டுகளாக சென்னையில் இருந்து கொண்டு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்திருப்பது, பலத்த சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.

இந்தச் சந்தேகங்கள் மேலும் வலுப்படுவதைத் தவிர்க்கவும், போதைப் பொருள்கள் புழக்கம், நமது நாட்டின் மீது தொடுக்கப்படும் போர் என்பதை மனதில் கொண்டும், உடனடியாக தமிழக அரசு போதைப் பொருள்கள் கடத்தலில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன், என்று அவர் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x