Published : 14 Feb 2018 07:48 AM
Last Updated : 14 Feb 2018 07:48 AM

இணைய வழி பத்திரப் பதிவு முறையில் ஆவணங்கள் தயாரிக்க, சான்றுகளை பெற வழக்கறிஞர்களுக்கு சிறப்பு வசதி: பதிவுத் துறை அறிவிப்பு

இணையதளம் மூலம் சொத்துப்பதிவுக்கான ஆவணம் தயாரிக்கவும் சான்றிதழ்களை பெறுவதற்கும் வழக்கறிஞர்களுக்கு பிரத்யேக வசதிகளை பதிவுத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பதிவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பதிவுத் துறை சார்பில் ஒருங்கிணைந்த வலை அடிப்படையிலான ஆவணப்பதிவில் எளிமையாக்கப்பட்ட, வெளிப்படை நிர்வாகத்தையும் (ஸ்டார் 2.0 திட்டம்), இதற்கான புதிய இணையதளத்தையும் (htttps://tnreginet.gov.in) முதல்வர் தொடங்கி வைத்தார்.

பொதுவாக, பொதுமக்கள் சொத்து வாங்குவதற்கு முன்பு அதன் உரிமையாளர்களை சட்டத்துக்கு உட்பட்டு கண்டறிய வழக்கறிஞர்களை நாடுகின்றனர். இதுமட்டுமின்றி பலர், வழக்கறிஞர்களிடமே ஆவணங்களை தயார் செய்து பெற்று பதிவு செய்கின்றனர். பல உரிமையியல் வழக்குகளுக்கு பதிவுத் துறை வழங்கும் சான்றிட்ட ஆவண நகல், வில்லங்கச் சான்று, திருமண பதிவுச் சான்று, பிறப்பு, இறப்பு சான்று போன்றவற்றை வழக்கறிஞர்கள் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், வழக்கறிஞர்களின் பணிகளை எளிமைப்படுத்தும் வகையில் தேவையான சான்றுகளை உடனுக்குடன் தவறின்றி வழங்க, தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மென்பொருளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தேவையான சில விவரங்களை மட்டும் பதிவு செய்து எளிமையாக ஆவணங்களை உருவாக்கலாம். முன் ஆவண எண்ணை பதிவு செய்து, அதில் இருந்து விவரங்களை நகல் எடுத்து சில விவரங்களை மட்டும் மாற்றி ஆவணங்களை எளிதில் தயாரிக்கலாம்.

கட்டுமான உடன்படிக்கை, பிரிக்கப்படாத சொத்து கிரையம், உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு ஆகியவற்றை ஒரே நேரத்தில் உருவாக்கவும், பதிவு செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆவணப்பதிவு தொடர்பான எல்லா சேவைகளும் கணினி வழியாக இருப்பிடத்திலேயே வழங்கப்படுவதால் வழக்கறிஞர்கள் பதிவுத் துறை அலுவலகங்களுக்கு நேரடியாக செல்ல வேண்டியது குறைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, பல்வேறு புதிய வசதிகளும் வழங்கப்படுகின்றன. ஆவணப்பதிவுக்கு முன்பு ஆவண வரைவை ஆதாரங்களுடன் அனுப்பி சரிபார்த்தல், பதிவு நேரத்தை இணையவழி முன்பதிவு செய்தல், மதிப்பு நிர்ணயித்தல், உடனுக்குடன் ஆவணப்பதிவு ஆகியவை முக்கியமான வசதிகளாகும்.

இணையதளம் வழியாக விண்ணப்பித்து, கட்டணத்தையும் செலுத்தி சம்பந்தப்பட்ட சார்பதிவாளரின் சான்றொப்பமிட்ட வில்லங்கச் சான்று, ஆவண நகலை மின்னஞ்சலில் பெறும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மோசடி பதிவுகளை தடுக்கும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, வழக்கறிஞர்கள் ‘http://tnreginet.gov.in’ என்ற இணையதளத்தில் சென்று தங்களுக்கான உள்நுழைவு (login) ஏற்படுத்திக் கொள்ளலாம்.

இணையதளத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆவண எழுத்தர்களுக்கு உள்ளதுபோல பிரத்யேக உள்நுழைவு வழங்குவது தொடர்பாக, பார்கவுன்சில் மற்றும் அரசிடம் உரிய கருத்து பெற்று விரைவில் வழங்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x