Published : 21 Feb 2024 06:13 AM
Last Updated : 21 Feb 2024 06:13 AM
சென்னை: 2022-23-ம் நிதியாண்டில் சென்னை நகர அஞ்சல் துறை சார்பில் 22,181 விபத்துக் காப்பீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்திய அஞ்சல் துறையின்கீழ் செயல்பட்டுவரும் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி மற்றும்டாடா ஏஐஜி காப்பீட்டு நிறுவனம் இணைந்து விபத்துக் காப்பீடுகளை விற்பனை செய்து வருகின்றன.
இந்த காப்பீடு எடுத்த புருஷோத்தமன் என்பவர் அண்மையில் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது வாரிசுதாரர் இளங்கோஎன்பவருக்கு ரூ.10 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.
சென்னை நகர மண்டல அஞ்சல்துறை சார்பில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இதற்கான காசோலையை அஞ்சல் சேவைகள் இயக்குநர் ஜெனரல் ஸ்மிதா குமார் வழங்கினார்.
டாடா ஏஐஜி நிறுவனம் வழங்கும் ரூ.10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டுக்கு ஆண்டொன்றுக்கு பிரீமியம் தொகையாக ரூ.520 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. உடல் உறுப்புகள் நிரந்தரமாக அல்லது பகுதியாக செயலிழத்தல் உள்ளிட்டவற்றுக்கும் இந்த காப்பீடு மூலம் இழப்பீடு வழங்கப்படுகிறது.
2022-23-ம் நிதியாண்டில் தமிழ்நாடு வட்ட அஞ்சல் துறை சார்பில்81 ஆயிரம் விபத்து காப்பீடுகளும், இதில், சென்னை நகர அஞ்சல் துறை சார்பில் 22,181 காப்பீடுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் பதிவு எண் வழங்கியதற்காக, சென்னை நகர மண்டல அஞ்சல் துறைக்கு பரிசு வழங்கப்பட்டது. சர்வதேச அஞ்சல் சங்கம் சார்பில்நடத்தப்பட்ட சர்வதேச கடிதம்எழுதும் போட்டியில் சென்னையைச் சேர்ந்த ஜஃபீரா என்ற பள்ளி மாணவிக்கு பரிசு வழங்கப்பட்டது.
விழாவில், தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல் துறை தலைவர் ஸ்ரீதேவி, சென்னை நகர மண்டலஅஞ்சல் துறை தலைவர் ஜி.நடராஜன், சென்னை நகர மண்டல அஞ்சல் சேவைகள் இயக்குநர் மேஜர் மனோஜ், இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியின் சுயாதீன இயக்குநர் ஏ.காளியண்ணன், துணை பொது மேலாளர் ஜி.கே.கோவிந்தராஜ், உதவிப் பொது மேலாளர் என்.ஆர்.திவாகரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT