Last Updated : 20 Feb, 2024 05:46 PM

 

Published : 20 Feb 2024 05:46 PM
Last Updated : 20 Feb 2024 05:46 PM

புதுச்சேரி தலைமைச் செயலராக சரத் சவுகான் பதவியேற்பு - திருப்பதி லட்டு தந்து வரவேற்பு

புதுச்சேரி: புதுச்சேரியின் புதிய தலைமைச் செயலாளராக சரத் சவுகான் பதவியேற்றார். புதுச்சேரி மக்கள், அரசுடன் இணைந்து செயல்படுவேன் என்று முதல்வர், பேரவைத் தலைவர் சந்திப்புக்கு பிறகு அவர் குறிப்பிட்டார்.

புதுவை மாநில தலைமை செயலாளராக ராஜீவ்வர்மா இருந்தார். இவர் தன்னிச்சையாக செயல்படுவதாக ஆளும் கட்சி கூட்டணி எம்எல்ஏக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பட்ஜெட் கூட்டத்தொடரில் தலைமை செயலரின் செயல்பாடுகளை எம்எல்ஏக்கள் கடுமையாக விமர்சித்தனர். அரசுக்கு ஒத்துழைக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவைத்தலைவர் செல்வம் தெரிவித்திருந்தார். அதை தொடர்ந்து அரசு செயலர் இட மாற்றத்தில் முதல்வர் ரங்கசாமியை தலைமைச் செயலாளர் ராஜீவ்வர்மா கலந்து ஆலோசிக்கவில்லை என்று குற்றச்சாட்டும் எழுந்தது.

தலைமைச் செயலாளரை மாற்ற முதல்வர் தரப்பில் மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து புதுவை தலைமைச்செயலாளர் மாற்றப்பட்டார். அருணாச்சல பிரதேசத்திலிருந்து ஐஏஎஸ் அதிகாரி சரத் சவுகான் புதுவை மாநில தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார்.

புதுச்சேரிக்கு இன்று வந்த, சரத்சவுகான் தலைமை செயலகத்தில் தலைமை செயலாளராக பதவி ஏற்றுக் கொண்டார். புதிய தலைமை செயலாளராக பதவி ஏற்றுக்கொண்ட அவருக்கு செயலாளர்கள், தலைமைச் செயலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து சட்டப்பேரவைக்கு வந்த தலைமைச்செயலாளர் சரத் சவுகான், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து சால்வை அணிவித்தார். இது பாரம்பரிய வழக்கம் என்று குறிப்பிட்டார். பின்னர் இருவரும் சிறிது உரையாடினர்.

திருப்பதி லட்டு தந்து வரவேற்பு: பின்னர் பேரவைத் தலைவர் செல்வத்தை சந்தித்தார். அப்போது, "புதுச்சேரி அரசுக்கும் மக்களுக்கும் ஒத்துழைப்பு தாருங்கள்" என்று தலைமைச் செயலாளரிடம் பேரவைத் தலைவர் குறிப்பிட்டார். அவரிடம் திருப்பதியில் இருந்து வந்த லட்டு பிரசாதத்தை தந்தார். அதை வணங்கி ஏற்றுக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் தலைமைச்செயலாளர் சரத் சவுகான் கூறுகையில், "புதுவை மக்களின் நலனுக்காக பாடுபடுவேன், சிறந்த நிலையிலுள்ள புதுச்சேரியில், சுகாதாரம், கல்வி, மாநிலத்தின் சமூக நல மேம்பாடு ஆகியவற்றின் மேம்பாட்டில் முழு கவனம் செலுத்துவேன். மக்கள் இங்கு கல்வித்திறனில் சிறந்துள்ளனர். புதுவை மக்களின் தேவைகளை அறிந்து அவர்களின் வளர்ச்சி மற்றும் வாழ்க்கை நலனுக்காக பாடுபடுவேன். புதுச்சேரி மக்கள் மற்றும் அரசுடன் இணைந்து செயல்படுவேன்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x